Skip to main content

ஜெ.வுக்கு அரசு செலவில் நினைவிடம் கட்டுவதில் விதிமீறலோ, சட்டவிரோதமோ இல்லை - ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல்

Published on 31/10/2018 | Edited on 31/10/2018
me


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளி இல்லை என்பதால், அரசு செலவில் அவருக்கு நினைவிடம் கட்டுவதில் விதிமீறலோ, சட்டவிரோதமோ இல்லை என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.


சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில், 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு செலவில் நினைவிடம் கட்டுவதை தடை செய்யக்கோரி ஆர்.கே.நகர் வேட்பாளரும், தேசிய மக்கள் கட்சித் தலைவருமான எம்.எல்.ரவி வழக்கு தொடர்ந்திருந்தார்.


அந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஹுலுவாடி ஜி. ரமேஷ், கே.கல்யாணசுந்தரம் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர் ஆர்.வெங்கடேசனின் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

 

அந்த பதில் மனுவில், ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்ட 2016 டிசம்பர் 7ஆம் தேதி அனுமதி அளிக்கப்பட்டு, 2018 ஜனவரி 10ஆம் தேதி 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான அடிக்கல் மே 7ஆம் தேதி நாட்டப்பட்டது. அதனால் ஜெயலலிதா நினைவிடம் கட்டுவது அரசின் முடிவு அதிகார வரம்புக்கு உட்பட்டதுதான். 

 

அதுமட்டுமல்லாமல், மாநில கடலோர மேலாண்மை மண்டல ஒழுங்குமுறை ஆணையம், மாநகராட்சி என அனைவரிடமும் அனுமதி பெறப்பட்டுள்ளது. நினைவிடம் கட்டுவதில் விதிமீறல், சட்டவிரோதம் ஏதுமில்லை. அதுமட்டுமல்லாமல் சொத்து குவிப்பு வழக்கிலிருந்து கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவை விடுதலை செய்ததை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கில் மற்ற மூவர் மீதான தண்டனை உறுதிசெய்யப்பட்டாலும், அப்போது ஜெயலலிதா இறந்துவிட்டதால் தண்டனை கைவிடப்பட்டது. எனவே ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட குற்றவாளி அல்ல. அந்த தீர்ப்பின் அடிப்படையில்தான், சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் வைத்ததை எதிர்த்த மனுவும் தலைமை நீதிபதி அமர்வால் தள்ளுபடி செய்யப்பட்டது. அதேபோல இந்த வழக்கும் தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இதையடுத்து, இந்த வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி வாதிட இருப்பதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டுமென அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.  அதனையேற்ற நீதிபதிகள் வழக்கை நவம்பர் 12ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


 

சார்ந்த செய்திகள்