கரோனா தொற்று காரணமாக போதிய இடவசதிகள் இல்லாததால் சென்னை கோட்டையில் நடைபெற வேண்டிய சட்டசபை கூட்டம் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கிற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டு நேற்று சட்டமன்றம் கூடியது. இன்று இரண்டாம் நாளாக சட்டமன்ற கூட்டம் நடந்துவரும் நிலையில், இன்றையை கூட்டத்தொடரில் மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை தாக்கல் செய்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
தனியார் பள்ளி மாணவர்களுக்கும், அரசு பள்ளி மாணவர்களுக்கும் இடையே உண்மையான சமத்துவத்தை ஏற்படுத்த இந்த ஒதுக்கீடு உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 12 வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு இந்த உள் ஒதுக்கீடு பயனளிக்கும். நீட் தேர்வில் வெற்றி பெற்றாலும் அரசுப்பள்ளி மாணவர்கள் பலருக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம், ஹோமியோபதி இளங்கலை படிப்புகளில் முன்னுரிமை தர இந்த உள் ஒதுக்கீடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முதல்வர் தாக்கல் செய்த இந்த உள் ஒதுக்கீடு மசோதா சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் பொது இடங்களில் மாஸ் அணியாமலிருந்தால் அபராதம் விதிப்பதற்கான மசோதாவும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.