தகைசால் தமிழர் சங்கரய்யாவுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மூலம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்க ஆவண செய்யப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 15 ஆம் தேதி அறிவித்திருந்தார். இதனையடுத்து சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழுவின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு அனுமதி வழங்க கோரி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் அதற்கு ஆளுநர் ஆர்.என். ரவி அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்த சூழலில் சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் அளிக்கும் கோப்பில் ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்திட மறுத்ததாக சிபிஐஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டி இருந்தார். அதே சமயம் ஆளுநருக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் இது குறித்து பேசுகையில், “சுதந்திரப் போராட்டத் தியாகி திரு. என். சங்கரய்யா அவர்களுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என்று மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆளுகை மன்றமும், ஆட்சி மன்ற குழு பிறப்பித்த உத்தரவை கூட ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொள்ளாமல் பேசி இருப்பதை பார்த்தாலே உண்மையை புரிந்துகொள்ள முடியும்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நவம்பர் 2 ஆம் தேதி (02.11.2023) அன்று பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. அந்த பட்டமளிப்பு விழாவிற்கு முன்பாகவே உண்மையிலேயே ஆளுநருக்கு தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் மீது அக்கறை இருக்குமானால் ஆளுநர் இதன் பிறகாவது சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் அளிக்கும் கோப்பில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக திருச்சி மாவட்டத்தில் மருது சகோதரர்களின் நினைவு நாள் நிகழ்ச்சி நேற்று முன்தினம் (23-10-23) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “தமிழகத்தில் ஆரியம், திராவிடம் என ஒன்று கிடையாது. இந்தியாவை பிரித்தாளும் கொள்கைக்காவே கால்டுவெல் போன்றோர்கள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சுதந்திர தினத்தை கருப்பு நாள் என்று கூறியவர்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள். சுதந்திரத்திற்கு போராடிய மருது சகோதரர்களும், முத்துராமலிங்க தேவர் ஆகியோரும் வெறும் சாதித் தலைவர்களாக கருதப்படுகின்றனர். காந்தி, சுபாஷ் சந்திர போஸ், பகத் சிங் உள்ளிட்டோர் தமிழகத்தில் பிறந்திருந்தால் அவர்களையும் சாதி சங்க தலைவர்களாக மாற்றியிருப்பார்கள். தியாகிகளை சாதி தலைவர்களாக அடையாளப்படுத்தி மக்களை ஒன்று சேர விடாமல் தடுக்கின்றனர்” என்று கூறி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.