Skip to main content

ஆரிய அபாயத்தைப் புரிந்து கொள்ள மனுநீதி நூல் புழக்கத்தில் இருப்பதே பாதுகாப்பானது- பெ.மணியரசன்

Published on 27/10/2020 | Edited on 27/10/2020
Maniyarasan statement

 

தமிழ் தேசியப்பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த செப்டம்பர் 27ஆம் நாள் ஐரோப்பிய வாழ் தமிழர்களிடையே பெரியார் குறித்த இணையவழிக் கருத்தரங்கில் உரையாற்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் தொல். திருமாவளவன் அவர்கள், மனுநீதி நூலில் வர்ண வேறுபாடின்றிப் பெண்கள் அனைவரையும் பிறப்பு அடிப்படையில் இழிவுபடுத்திய ஒரு பகுதியை அந்நூலில் இருந்து படித்துக் காட்டினார். இத்திறனாய்வு மூலம் பெண்களை அவர் இழிவுபடுத்திவிட்டதாக, ஆரியத்துவாவாதிகள் கூச்சல் எழுப்புகின்றனர்.

மனு தமது நூலில், பல பத்திகளில் பெண்களை மிகமிக இழிவாகக் கூறி கேவலப் படுத்தியுள்ளார். அவ்வாறு பெண்களை இழிவுபடுத்தி மனு கூறியுள்ள பத்திகளை எடுத்துப் போட்டு, அவற்றை மறுத்து மனுவை ஞாயப்படுத்தி ஆரியத்துவாவாதிகள் விளக்கம் அளித்தால் அது ஆக்கவழிப்பட்ட விவாதமாக இருக்கும். ஆனால், திருமாவளவன் மேற்கோள் காட்டிய மனுவின் அசல் வரிகளை மறைத்து விட்டு, திருமாவைச் சிறையில் அடைக்க வேண்டும் என்று எச். இராசா போன்ற நிரந்திரத் தமிழினப் பகைவர்கள் கூச்சல் போடுவது கண்டனத்திற்குரியது.

ஆரியத்துவா முகாமைச் சேர்ந்த நபர் ஒருவர் கொடுத்த புகாரை விசாரித்து உண்மை அறியாமல், அப்படியே இ.த.ச.வின் 153, 153 a, 295a, 298, 505(1), 505 (2) ஆகிய ஆறு பிரிவுகளில் தமிழ்நாடு காவல்துறை வழக்குப்பதிவு செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தைப் பொறுத்தவரை, மனுநீதி போன்ற மனிதகுல அநீதி ஆரிய நூல்களைத் தடை செய்யக் கூடாது என்று கருதுகிறது. ஏனெனில், அடுத்தடுத்த தலைமுறை தமிழர்கள் ஆரியத்தின் மனிதகுல விரோத நூலைப் படித்து எச்சரிக்கை அடைந்து, ஆரிய அபாயத்தைப் புரிந்து கொள்ள மனுநீதி நூல் புழக்கத்தில் இருப்பதே பாதுகாப்பானது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தனியே தக்க அதிகாரியை அமர்த்தி, தோழர் திருமாவளவன் பேச்சின் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குப் பிரிவுகள் அனைத்தையும் ஆய்வு செய்து, அவ்வழக்கைக் கைவிடுமாறு கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன் எனக்கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்