Skip to main content

“நெஞ்சை பதை பதைக்க வைக்கிறது” - எடப்பாடி பழனிசாமி வேதனை!

Published on 07/02/2025 | Edited on 07/02/2025
Makes the chest hurt Edappadi Palaniswami Anguish

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சி.பி.எஸ்.இ. பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் வகுப்பறையில் 4ஆம் வகுப்பு சிறுமிக்கு அப்பள்ளியின் தாளாளாரின் கனவர் வசந்தகுமார் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் மக்கள் மத்தியில் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் கைது செய்யப்ப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இதில் முக்கிய நபரான வசந்தகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி  கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திருச்சி மாவட்டம் மணப்பாறையில், 4ஆம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வரும் செய்தி நெஞ்சை பதை பதைக்க வைக்கிறது. பெண்கள், குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் எந்த விதமான அச்சமும் இன்றி அதிகரித்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது; இது கடும் கண்டனத்திற்குரியது. முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களே, பல்வேறு குற்றச்செயல்கள் நடந்து வரும் இவ்வேளையில் விளம்பர போட்டோ ஷூட்டிங் சுற்றுலாவில் நீங்கள் இருப்பது ரோம் நகரம் எரிந்து கொண்டிருக்கும் வேளையில், நீரோ மன்னன் பிடில் வாசிப்பது போல உள்ளது.

ஒரு, 4ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு, படிக்கும் பள்ளியில் கூட பாதுகாப்பு இல்லாத அளவிற்கு ஒரு ஆட்சியை நடத்துகிறீர்கள். உங்கள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் மாவட்டத்தில் நடந்திருக்கக் கூடிய இந்த கொடுமைக்கு என்ன பதில் வைத்திருக்கிறது. மேலும் அதே பள்ளியில் பயிலும் மற்றுமொரு மாணவியும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், அவர் காவல்துறையில் புகார் அளித்ததாகவும் செய்திகள் வருகிறது.

எனவே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மட்டும்தான் இக்குற்றச்சாட்டில் தொடர்பு உள்ளவர்களா?. வேறு பலர் உள்ளார்களா என முறையாக விசாரித்து, இதில் தொடர்புள்ள அனைவர் மீதும் மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக அரசை வலியுறுத்துகிறேன். பாதுகாப்பில்லா தமிழ்நாடு” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்