Skip to main content

வேலையைவிட்டு நீக்கிவிடுவதாக மிரட்டி பாலியல் தொல்லை... பெண் பணியாளர்கள் புகார்!

Published on 03/07/2020 | Edited on 03/07/2020

 


மதுரையில் நாளுக்கு நாள் நோய்தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் கரோனா சிறப்பு மருத்துவமனையில் செவிலியர்கள், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் என அனைவரும் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் முன் களப்பணியாளர்கள் ஆக இருந்து சேவை பணிகளைச் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.


அதே போல் மதுரை அரசு கரோனா சிறப்பு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் ஆண்கள் பெண்கள் என 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மதுரை அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணி, வாட்ச்மேன் பணிகளை மேற்கொள்ள இரண்டு தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் செயல்படும் நிலையில் கரோனா சிறப்பு மருத்துவமனையில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தைச் சேர்ந்த மேற்பார்வையாளர் மோகன் என்பவர் அவருடன் பணியாற்றும் ஒப்பந்தப் பெண் ஊழியர்களுக்குப் பாலியல் தொந்தரவு தருவதாக மிக வேதனையுடன் கூறுகின்றனர்.


அவருக்குப் பிடித்தது போல் நடந்து கொண்டால் வேலைகள் குறைவாக தருவதாகவும், இல்லையென்றால் பணிச்சுமையை அதிகப்படுத்துவது அல்லது புகார் அளித்து வேலையிலிருந்து நீக்கி விடுவது போன்ற காரியங்களைச் செய்வேன் என்று மிரட்டி வருவதாகவும் ஒப்பந்தப் பெண் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

 

இதனால் பல பெண்கள் குடும்பத்தில் பிரச்சனைகளுக்கு ஆளாகி பணியிலிருந்து நின்று விட்டதாகவும் மேலும் தற்போது பணியாற்றி கொண்டிருக்கும் அனைத்துப் பெண்களுக்கும் இது போன்ற பாலியல் தொந்தரவு தொடர்ந்து கொடுத்து வருவதாகவும் பணியில் இருக்கும் ஒப்பந்தப் பெண் பணியாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

 

இதனை மருத்துவமனை உயரதிகாரிகளிடம் பலமுறை எழுத்துப் பூர்வமாகப் புகார் தெரிவித்தும் அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மனவேதனையுடன் கூறுகின்றனர்.

 

கரோனா காலத்திலும்  குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக நாங்கள் இது போன்ற ஆபத்தான பணிகளைச் செய்து வருகின்றோம். இது போன்ற பாலியல் தொல்லைகள் தருவது தங்களுக்கு மேலும் மன உளைச்சலை அளிக்கிறது என்றும் தங்களது புகார் மீது மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தற்கொலை செய்து கொள்ளக் கூட தயங்க மாட்டோம் என அப்பெண்கள் கண்ணீர் மல்க கூறுகின்றனர்.

 

மேலும் நோயாளிகளிடமும் நோயாளிகளைப் பார்க்க வரும் பார்வையாளர்களிடம் மோகன் மிகவும் தவறாக நடப்பதாகவும் அவர்கள் புகார்களைத் தெரிவித்துள்ளனர்.

 

http://onelink.to/nknapp

 

இந்தப் புகார்கள் குறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் டீன் சங்கு மணி அவர்களிடம் கேட்டபோது, சம்பந்தப்பட்ட ஒப்பந்த ஊழியர் மோகன் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் வந்துள்ளதாகவும் பெண் ஊழியர்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை தருவது தொடர்பான புகார் தற்போது தான் தன்னுடைய கவனத்திற்கு வந்ததாகவும் தெரிவித்தார். மேலும், சம்பந்தப்பட்ட ஒப்பந்தப் பணியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்