மதுரை தெப்பக்குளம் பகுதியில் மருதிருவர் சிலைகள் உள்ளன. இன்று அவர்களுக்கு நினைவுதினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு மற்றும் அதிமுக நிர்வாகிகள் அங்கு வந்து மரியாதை செலுத்தினர்.
மருதிருவர் சிலைகளுக்கு மாலை அணிவித்துவிட்டு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம் “நாட்டின் விடுதலைக்காகப் போரிட்டவர் வேலுநாச்சியார். அவரது வீரத்தளபதிகளாக விளங்கியவர்கள் சின்ன மருது மற்றும் பெரிய மருது சகோதரர்கள். அவர்களின் 218-வது குருபூஜையை முன்னிட்டு, அந்த மாபெரும் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வெளையில், தமிழக அரசின் சார்பில் நாங்களும் மரியாதை செலுத்திக்கொண்டிருக்கிறோம். நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுக முன்னிலையில் இருக்கிறது. இவ்விரண்டு தொகுதிகளிலுமே அதிமுக மாபெரும் வெற்றி பெறும்.” என்றார் உற்சாகத்தோடு.