அண்மையில் அப்துல்கலாம் என்ற பள்ளி சிறுவன் ஒருவன் இணையதள பேட்டி ஒன்றில் மனித நேயம் குறித்து பேசியிருந்தது வைரலாகி இருந்தது.
மாணவன் அப்துல் கலாம் பேச்சு அனைவராலும் பாராட்டப்பட்டாலும் வாடகை வீட்டில் வசித்து வரும் தாங்கள் வெளியேறும் சூழல் ஏற்பட்டதாக சிறுவனின் தயார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழக அரசு சார்பில் சிறுவன் அப்துல் கலாமின் குடும்பத்திற்கு வீடு ஒதுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்ததோடு, நேற்று தமிழக முதல்வரை குடும்பத்துடன் மாணவன் அப்துல் கலாம் சந்தித்தான்.
இந்நிலையில் சிறுவன் அப்துல் கலாம் குடும்பத்திற்கு சென்னை கே.கே.நகரில் உள்ள சிவலிங்கபுரம் பகுதியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீட்டினை தமிழக அரசு வழங்கியுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த சிறுவன் அப்துல் காலம் குடும்பத்தினர் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். அப்பொழுது பேசிய சிறுவனின் தாய், ''இவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தில் சின்ன கல்லாகத்தான் இருந்தோம். இந்த பிள்ளையின் மனிதாபிமானம் அவன் சின்ன வயசுல இருந்து பார்த்தது பதிஞ்சு போனதுதான் அவனிடம் இருந்து இந்த வார்த்தைகள் எல்லாம் வந்துச்சு. அவனுக்கு நாங்கள் எதையுமே சொல்லிக்கொடுக்கவில்லை. அவனது அனுபவமே அவனை இவ்வளவு பக்குவப்பட்டு பேசவெச்சிருக்கு. இதற்கு எங்கள் திருமணமே சாட்சி. நான் ஒரு இந்துப்பெண். நாங்கள் காதல் திருமணம் செய்துகொண்டோம். எங்கள் வாழக்கையில் நிகழ்ந்த அனைத்தையும் அவன் பார்த்திருக்கான். குழந்தையாக இருக்கும்போதே மதத்தைப்பற்றிக் கேட்டுள்ளான், மதம்னா என்னம்மா ஜாதினா என்னம்மானு கேட்ருக்கான். மதம் ஜாதி என்றெல்லாம் எதுவும் ஆண்டவன் படைக்கலப்பா. நாம் தான் மதம் ஜாதி'னு பிரிச்சு பார்த்துட்டிருக்கோம். நாம் அனைவரும் ஒன்னுதான் என்று இந்த குழந்தை மனசுல விதைச்சோம். இதைத்தவிர வேறு எதையும் சொல்லிக்கொடுக்கல'' என்றார் நெகிழ்ச்சியாக...