தவறி வந்த யானைக் குட்டியைப் பராமரித்து வந்த வன ஊழியர் ஒருவர் யானைக் குட்டியைப் பிரிந்த பொழுது கண்ணீர் விட்டு அழுத சம்பவம் நெகிழ வைத்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள கோடுபட்டி அருகே கடந்த வாரம் காட்டிலிருந்து தாயைப் பிரிந்து வழித் தவறி வந்த குட்டி யானை ஒன்று அந்தப் பகுதியில் உள்ள 30 அடி ஆழம் கொண்ட விவசாய கிணற்றில் தவறுதலாக விழுந்தது. இதனையறிந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த வனத்துறை குழுவினர் யானை குட்டியை கயிறுகட்டி மேலே தூக்கி காப்பாற்றினர்.
வெளியே கொண்டு வரப்பட்ட யானைக் குட்டியை ஆசுவாசப்படுத்தி வனத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். மீட்கப்பட்ட அந்த யானைக் குட்டியை மகேந்திரன் என்ற வன ஊழியர் ஒரு வாரமாக குளுக்கோஸ், இளநீர் போன்ற உணவுகளைக் கொடுத்து பராமரித்து வந்தார். இந்த நிலையில் யானைக் குட்டியை முதுமலையில் உள்ள யானைப் பாகன் பொம்மனிடம் கொடுத்து வளர்க்கலாம் என வனத்துறை முடிவு செய்தது. அதற்காக யானை குட்டியானது இன்று முதுமலை சரணாலயத்திற்கு வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அப்பொழுது ஒரு வாரம் பழகிய யானைக் குட்டியைப் பிரிய மனமில்லாமல் வன ஊழியர் மகேந்திரன் தேம்பித் தேம்பி அழுதார். இது அங்கிருந்தோரை நெகிழ வைத்தது.