தூத்துக்குடி மாவட்டத்தின் மத்தியிலமைந்திருக்கும் மானாவரிக் காடுகளைக் கொண்ட வானம் பார்த்த பூமி ஒட்டப்பிடாரம்.
நாட்டின் சுதந்திரத்திற்காக தன் உயிர் மூச்சையும், சுதேசிக்காக தன் சொத்துக்களை வாரி வழங்கிய செக்கிழுத்த, செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை. விடுதலைக்காக வீரமுழக்கமிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன், ஆங்கிலேயக் கும்பனியர்களின் ஆயுதக்கிடங்கை, முதல் தற்கொலை படைவீரனாக உருவெடுத்து அழித்துதொழித்த ராஜ விசுவாசி, வீரன், தளபதி சுந்தரலிங்கம், கட்டபொம்மனின் தீரமிக்க படைத் தளபதி வல்லநாடு வெள்ளையத் தேவன். வெள்ளைக் கலெக்டரான ஆஷ் துரையை சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் தன்னைத் தானே சுட்டுக் கொன்ற மணியாச்சி ரயில் நிலையம் இது போன்ற பல்வேறு சுதந்திரப்போராட்டத்தியாகிகளை உள்ளட்டக்கிய வீறு கொண்ட மண் ஒட்டப்பிடாரம்.
சரித்திரக் கல்வெட்டுக்களில் பதியப் பெற்ற தென்னகத் தமிழர்களின் சுய நலமற்ற தியாகங்களை ஓங்கி ஒலிக்கும் ஒட்டப்பிடாரம், தற்போது முன்னேற்றப்பாதை தெரியாமல் தனி மரமாக நிற்கிறது. காரணம் அரசியல் காரணங்கள்.
வரையறுக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின் படி 2,30,262 வாக்காளர்களைக் கொண்ட ஒட்டப்பிடாரத்தின் தொகுதி மறு சீரமைப்புப் படி தற்போது மாறிய நிலைமையில் நாடார்,ஆதிதிராவிடர்கள் ,தேவர் மற்றும் பிற சமூகத்தவர்கள் என்று வாக்கு வரிசைகளிருக்கின்றன. அ.தி.மு.க.வின் எம்.எல்.ஏ.வான சுந்தர்ராஜ் ’ஜெ’ மறைவிற்குப் பின்பு டி.டி.வி. அணியின் பக்கம் திரும்பினார். அவரோடு சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்பு தற்போது இடைத்தேர்தலை சந்திக்கவிருக்கிறது தொகுதி.
டி.டி.வி.யின் அ.ம.மு.க. சார்பில் அனுதாபம் காரணமாக மறுபடியும் சுந்தர்ராஜே வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்கிற நிலை. தி.மு.க.வோ முதன் முதலாத தனது வேட்பாளாராக ஒ.செ.வான சண்முகையாவை அறிவித்து விட்டது. எக்ஸ் எம்.எல்.ஏ. மோகன், ஆவின் சேர்மன் சின்னத்துரை போன்றவர்கள் அ.தி.மு.க. சார்பில் முண்டிக் கொண்டிருக்கிறார்கள்.
1971 முதல் தற்போது வரை 10 பேர்கள் எம்.எல்.ஏ.க்களாக இருந்த போதிலும், மருத்துவம், சுகாதாரம், அடிப்படை கட்டமைப்புகள், தொழில் வளம் போன்றவைகள் பேசும் அளவுக்கு தொகுதியில் பரவலாக்கப்படவில்லை. தொகுதியின் 50 ஆண்டுகால அடிப்படை கோரிக்கையான குடி நீர் தேவைக்குத் தீர்வு கிடைக்காமல் தன் மரமாகிப் போனது ஒட்டப்பிடாரம் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.