
தமிழ்நாட்டில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (09/10/2021) காலை 07.00 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும், 626 ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கும், 1,324 கிராம ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கும் வாக்குப்பதிவு நடக்கிறது. அதேபோல், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று மாலை மூன்று மணி நிலவரப்படி செங்கல்பட்டில் 56.78 சதவிகிதம் வாக்கும், ராணிப்பேட்டை-60.08 சதவிகிதம், கள்ளக்குறிச்சி-65.84 சதவிதம், தென்காசி-57.62 சதவிகிதமும் வாக்கு பதிவாகியுள்ளது.
இந்நிலையில் வேலூரில் உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக ஒருவருக்கு கத்திக்குத்து நிகழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த கெங்காநல்லூர் ஊராட்சியில் 8 மற்றும் 9 ஆவது வார்டில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது வெங்கடேஷ் என்பவருக்கு ஏற்கனவே இருந்த தேர்தல் முன்விரோதம் காரணமாக கத்திக்குத்து நிகழ்ந்துள்ளது.
ஏற்கனவே தேர்தல் நடைமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டு செயல்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு ஊராட்சிகளில் தேர்தல் மோதல், தேர்தல் புறக்கணிப்பு போன்றவை நிகழ்ந்த வண்ணமே உள்ளது. கள்ள ஓட்டுபோட்டதால் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கத்திக்குத்து சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.