ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்ட அங்கன்வாடி மைய குழந்தைகள் உட்பட 9 பேர் மயக்கம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை அடுத்துள்ளது பனையங்கால் கிராமம். இக்கிராமத்தில் அங்கன்வாடி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. பல குழந்தைகள் இந்த அங்கன்வாடி மையத்தில் பயின்று வந்த நிலையில், இன்று மதியம் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் அங்கன்வாடி மையத்தில் தயார் செய்யப்பட்ட உணவை அருந்தியுள்ளனர். குழந்தைகள் ஏழு பேர், அங்கன்வாடி மையத்தில் பணிபுரிவோர் இரண்டு பேர் என மொத்தம் ஒன்பது பேர் உணவைச் சாப்பிட்ட நிலையில், அந்த உணவில் பல்லி இருந்தது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து உணவு சாப்பிட்ட ஒன்பது பேரும் மயக்கமடைந்த நிலையில் அனைவரும் கீழக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். தகவலறிந்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் சிகிச்சையில் இருக்கும் அனைவரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.