தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, சேலம் மாநகராட்சி ஊழியர்கள் தேர்தல்களின் கண்ணியத்தை நிலைநிறுத்துவோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
ஆண்டுதோறும் ஜனவரி 25- ஆம் தேதி, தேசிய வாக்காளர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 12- வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி அரசு அலுவலகங்களில் வாக்காளர் உறுதிமொழி மேற்கொள்ளப்பட வேண்டுமென தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி, சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆணையர் கிறிஸ்துராஜ் தலைமையில் ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை (ஜன. 25) உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மாநகராட்சி ஊழியர்கள், ''இந்திய குடிமக்களாகிய நாங்கள், ஜனநாயகத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டு, நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் கண்ணியத்தையும் நிலைநிறுத்துவோம் என்றும், ஒவ்வொரு தேர்தலிலும் எவ்வித அச்சமின்றியும், மதம், இனம், சாதி, சமூகத் தாக்கமின்றியும் அல்லது வேறு ஏதேனும் தூண்டுதல்களின்றியும் வாக்களிப்போம் என்றும் இதனால் உறுதி அளிக்கிறோம்,'' என்று உறுதிமொழி மேற்கொண்டனர்.