
சத்தியமங்கலம் பகுதிக்கு உட்பட்ட கிராமப் பகுதியை ஒட்டியுள்ள வறண்ட கிணற்றில் சிறுத்தைப் புலி ஒன்று விழுந்த நிலையில், சிறுத்தையைப் பார்க்க அப்பகுதியிலிருந்த மக்கள் இருசக்கர வாகனத்தில் படையெடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி மற்றும் பண்ணாரி ஒட்டிய வனப்பகுதிகளில் ஏராளமான சிறுத்தைகள் உள்ளன. இந்நிலையில் பண்ணாரி வனப்பகுதியிலிருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று புதுகுய்யனூர் என்ற கிராமத்தின் பேருந்து நிறுத்தத்திற்கு அருகே உள்ள 50 அடி ஆழம் கொண்ட ஒரு வறண்ட தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்தது.
அந்தக் கிணற்றுக்குள் இருந்து உறுமல் சத்தம் கேட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பகுதி மக்கள் கிணற்றில் எட்டிப் பார்த்த பொழுது, கிணற்றின் பாறைக்கு இடையில் சிறுத்தை இருந்தது தெரிய வந்தது. தண்ணீர் இல்லாத கிணற்றில் சிறுத்தை விழுந்து கிடப்பது தொடர்பான தகவல் அக்கம் பக்கத்தில் உள்ள கிராமங்களுக்குப் பரவியது. இதையடுத்து பல்வேறு பகுதி இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் படையெடுத்து வந்து சிறுத்தைப் புலியைப் பார்த்துச் சென்றனர். உடனடியாக வனத்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தற்போது வனத்துறை சிறுத்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.