தமிழக சட்டப் பேரவையில் கடந்தாண்டு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு எதிராகச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 'இந்திய அரசியலமைப்பு வழங்கக்கூடிய அதிகாரங்களுக்கு உட்பட்டு நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் செல்லுபடியாகக் கூடியது. பொது அமைதி, சுகாதாரம், சூதாட்டம் தொடர்பாக மட்டுமே இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு முழு அதிகாரம் இருக்கிறது. ஆன்லைன் சூதாட்டம் காரணமாக வேலையில்லா இளைஞர்கள், தினக்கூலிகள், ஆட்டோ டிரைவர்கள், போலீசார் என இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. இதனைத் தொடர்ந்து மனுதாரர்கள் தரப்பில் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதே சமயம் அரசு தரப்பில் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். அரசு தரப்பில் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்த பின், தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படும் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு தெரிவித்துள்ளது.