ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அதற்காக சிறப்பு விசாரணைக் குழுவை அரசு அமைக்க வேண்டும் என்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இன்று விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பது உறுதியாகியுள்ளதால் அரசு சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும். வெளிநாட்டில் சிகிக்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
மத்திய அரசாங்கம், ஜெயலலிதாவிற்கு ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் தருவதாக சொல்லி, அவர்கள் வெளிநாட்டில் சென்று சிகிக்சை பெற அனைத்தும் நாங்கள் செய்கிறோம் என்று சொன்னபோது, அதை தடுத்திருக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக இன்றைய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷணன் 'ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று மருத்துவம் செய்தால், இந்தியாவில் இருக்கும் மருத்துவர்களின் மதிப்பும், மரியாதையும் கெட்டுவிடும்' என்று சொல்லியிருக்கிறார்.
ஒரு நோயாளியின் உயிரை பார்க்க வேண்டுமே தவிர, அந்த மருத்துவருடைய மரியாதையை காப்பாற்றுவது முக்கியமல்ல. ஆக அந்த ராதாகிருஷ்ணின் பின்னணியை இந்த அரசாங்கம் உடனடியாக விசாரிக்க வேண்டும்.
நான் உட்பட எந்த அமைச்சரோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ, சட்டமன்ற உறுப்பினர்களோ யாரும் ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கப்படவில்லை இதுதான் உண்மை.
நாங்கள் காலை முதல் மாலை வரை அந்த மருத்துவமனையில் இருந்தோம், ஆனால் இன்று ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார், உப்மா சாப்பிட்டார் என்று சொல்லி 1 கோடியே 17 இலட்சம் ரூபாயை ஜெயலலிதாவின் மருத்துவ செலவில் சேர்க்கப்பட்டுள்ளது. யார் சாப்பிட்டார்கள் அந்த இட்லி, உப்மாவையெல்லாம்.
மருத்துவமனையில் நான் உடம்பு சரியில்லை என்று அனுமதிக்கப்பட்டால் என்னுடன் ஒருவர் இருக்கலாம், மற்றவர்கள் மாலை வீட்டுக்கு சென்றுவிட வேண்டும். எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் அப்படித்தான் இருப்பார்கள்.
ஆனால், மருத்துவமனையையே உல்லாச விடுதியாக மாற்றி, ஒரு குடும்பம் மொத்தமும் அங்கு தங்கியிருந்து, 1 கோடியே 17 இலட்சம் ரூபாய்க்கு இட்லியையும், தோசையையும் சாப்பிட்டு இருக்கிறார்கள் என்றால், இவர்கள் ஜெயலலிதாவிற்கு மருத்துவம் பார்த்தார்களா அல்லது அவர்களின் உள்நோக்கம் என்ன என்பதில்தான் மர்மம் அடங்கியிருக்கிறது.
75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவிற்கு, மூன்று மருத்துவர்கள் 'அவர் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறார், ஆஞ்சியோகிராம் செய்யவேண்டும்' என்று சொல்லியும். செய்யவிடாமல் தடுத்தது யார்?. ஆஞ்சியோகிராம் செய்யக்கூடாது, செய்தால் ஜெயலலிதா பிழைத்துவிடுவார் என்று நினைத்தது யார்?. தவறான தகவலை சொன்னது யார். தவறான சிகிக்சை கொடுத்த மருத்துவர் யார். அந்த மருத்துவமனையின் நோக்கம் என்ன. அந்த மருத்துவமனையை ஆட்டிப்படைத்தது யார்?. என்ற உண்மை அறியப்பட வேண்டும். என்று கேள்விகளை அடுக்கடுக்காய் அடுக்கினார்.