Skip to main content

6.5 ஏக்கர் பரப்பளவு உள்ள ஏரியை மீட்டுத்தரக் கோரி விவசாயிகள் போராட்டம்

Published on 18/05/2019 | Edited on 18/05/2019


 

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகில் பெரியநாகலூர் பஞ்சாயத்துக்குட்பட்ட சின்னநாகலூர் கிராமத்தில் அமைந்துள்ள 6.5 ஏக்கர் பரப்பளவில் உள்ள வீராணி ஏரியை தனியார் சிமெண்ட் ஆலை நிறுவனம் ஆக்கிரமித்துள்ளது என்று விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
 

நீர் நிலைகளை ஆக்கிரமித்ததோடு அல்லாமல் 60 அடி உயரத்திற்கு சுண்ணாம்புக்கல் சுரங்கங்களில் வெட்டி எடுக்கப்பட்ட மண்ணை குவியலாக கொட்டி வைத்துள்ளனர். ஆக்கிவிட்ட ஏரியினை மீட்டுத்தரவேண்டும். மேலும் நீரோடை ஒன்றையும் ஆக்கிரமித்து அதில் சாலை அமைக்கப்பட்டிருக்கிறது. அதனையும் மீட்டு 100 ஏக்கருக்கும் மேல் விவசாயிகள் பாசனம் செய்ய வசதியாய் இருந்த ஏரியை மீட்டு பழையபடி ஏரியை மீட்டுத் தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

 

Lake



மேலும் காடு வளர்ப்பு என்ற பெயரிலும் தனியார் சிமெண்ட் ஆலை நிறுவனம் வீராணி ஏரியை ஆக்கிரமித்து விவசாயிகளை ஏமாற்றி வருகிறது என குற்றஞ்சாட்டுகின்றனர். இவர்கள் காடு வளர்க்க வேண்டிய இடத்தில் வளர்க்கட்டும். ஏரியை எங்களுக்கு திருப்பித்தரட்டும். நடவடிக்கை எடுக்கவில்லையெனில் போராட்டம் தீவிரமடையும் என்று விவசாயிகள் எச்சரித்தனர். 

 

ஏரி குளங்களை ஆக்கிரமித்துள்ளவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்கத் தயங்கும் மர்மம் தான் என்ன என்று விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர். 6.5 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரியையும் நீரோடையையும் மீட்டுத்தர மாவட்ட நிர்வாகம் உயர்நீதிமன்ற ஆணையை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


 

நீர்நிலைகளை மீட்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பை மதித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்று நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உறுதுணையாக   அவர்களுக்கு உதவி புரிவதையே பட்டவர்த்தனமாக காட்டுகிறது. 30 நாட்களுக்குள் ஏரியை புனரமைக்காவிட்டால் அனைத்து விவசாய சங்க தலைவர்களை சந்தித்து மாவட்டதலைநகரில் போராட்டம் நடைபெறும் என கூறியுள்ளனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்