மயிலாடுதுறையைத் தொடர்ந்து கும்பகோணத்தையும் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து பெருந்திரள் பேரணி நடத்தது. கும்பகோணத்தைப் புதிய மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி நீண்ட நாட்களாகப் போராட்டம் நடத்து வருகிறது. அந்த வகையில், இன்று (20/02/2021) பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் என பெருந்திரள் பேரணி கும்பகோணத்தில் நடந்தது.
இந்தப் பேரணி கும்பகோணம் மொட்டைக் கோபுரம் பகுதியில் தொடங்கி பழைய மீன் மார்க்கெட்டில் நிறைவடையும் என அறிவித்திருந்தனர் போராட்டக்குழுவினர். அதன்படி, நூற்றுக்கணக்கானோர் மொட்டைக்கோபுரம் பகுதியில் திரண்டனர். இதனால் அந்தப் பகுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். அங்குவந்த தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் பேரணி செல்ல அனுமதி இல்லை எனத் தெரிவித்தார். இதனால், ஆத்திரமடைந்த போராட்டக்குழுவினர், காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நீண்டநேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் பேரணியை 1 கிலோ மீட்டர் தூரத்துக்குள் நடத்தி முடித்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்திய காவல்துறையினர் பேரணிக்கு அனுமதி வழங்கினர்.
அதைத் தொடர்ந்து, பேரணியை திருப்பனந்தாள் காசி மட அதிபர் ஸ்ரீலஸ்ரீ எஜமான் சுவாமிகள் தொடங்கி வைத்தார். மொட்டைக் கோபுரம் பகுதியில் தொடங்கிய பேரணி உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே முடிவடைந்தது. உச்சிப் பிள்ளையார் கோயில் பகுதியில் போராட்டக் குழுவினர் கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என பெரும் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் பேரணி மற்றும் போராட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
"கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக உருவாக்க வேண்டும் என அரசுக்குப் பல்வேறு கோரிக்கைகளை விடுத்து வருகிறோம். கோரிக்கையை வலியுறுத்தி பல கட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறோம், ஆனாலும் அரசு செவிசாய்த்திடவில்லை. இந்த நிலையில் இன்று (20/02/2021) தனி மாவட்டம் கோரும் போராட்டக் குழுவின் சார்பில் பொதுமக்கள், தொழிலாளர்கள், மாணவ, மாணவிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஒன்று சேர்ந்து பேரணி நடத்தி எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம்" என்கிறார்கள் போராட்டக் குழுவினர்.