![krishnagiri district mahila court judgement](http://image.nakkheeran.in/cdn/farfuture/iIZWjX5UlMHIAT4OhUSA7m5RgDHupEWWFPh1WIEHRHU/1614971083/sites/default/files/inline-images/c123.jpg)
ஓசூர் அருகே, சிறுமியைக் கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள திப்பாளம் பகுதியைச் சேர்ந்தவர் நவீன் (21). இவர், கடந்த 2017- ஆம் ஆண்டு, பிப். 2- ஆம் தேதியன்று, அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். இச்சம்பவம் குறித்து, ஓசூர் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் சசிகலா, அப்போது நவீன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தார். இந்த வழக்கின் விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்துவந்தது.
விசாரணை முடிவுற்ற நிலையில், மார்ச் 4- ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த நவீனுக்கு 7 ஆண்டு தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். அரசுத்தரப்பில் வழக்கறிஞர் கலையரசி ஆஜராகி வாதாடினார்.