Skip to main content

வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கப் பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்! 

Published on 17/08/2021 | Edited on 17/08/2021

 

Agricultural Co-operative Union workers strike

 

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உத்தமர் கோவில் வளாகத்தில் தமிழ்நாடு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியின், அனைத்துச் சங்கங்களின் பணியாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்ட வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கச் செயலாளர் காமராஜ் தலைமையில், 100 பெண்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

இந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில், பயிர்க் கடன், நகை கடன் மற்றும் மகளிர் குழுக் கடன்கள் தொடர்பான புள்ளி விபரம் தினமும் வெவ்வேறு வகையான படிவத்தில் கோரப்படுகிறது. இதற்கான உரிய கால அவகாசமும் வழங்குவதில்லை. இதனால் பணியாளர்கள் புள்ளி விவரம் சேகரிப்பதில் சிரமப்படுவதுடன் மிகுந்த மன உளைச்சலுடன் பணிபுரிந்து வருகின்றனர். ஆகவே தள்ளுபடி தொடர்பான புள்ளி விபரங்கள் வழங்குவதற்கு உரிய கால அவகாசம் வழங்கிட வேண்டும். 

 

சங்கங்கள் கடந்த 6 மாத காலமாக எவ்வித வரவு செலவுமின்றி முடங்கிப் போய் உள்ளன. இதனால் இட்டு வைப்பு செய்துள்ள வைப்புதாரர்களுக்கு வைப்புத் தொகையைத் திரும்ப வழங்க இயலவில்லை. ஆகவே சங்கங்களுக்கு போதிய நிதி ஆதாரம் வழங்கிட வேண்டும்.

 

கடந்த 2 ஆண்டுகளாக பயிர்க் கடன், நகைக் கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடன்களுக்கும் குறியீடு நிர்ணயம் செய்து குறியீட்டினை எய்திடும் வகையில் மாவட்ட அளவில் உயர் அதிகாரிகளால் பணியாளர்களுக்கு நிர்ப்பந்தம் செய்யப்பட்டது. தற்போது அதே அலுவலர்கள் ஆய்வு என்ற பெயரில் பல்வேறு இடங்களில் அலுவலர்களுக்கு மன உளைச்சலை உருவாக்குகின்றனர். ஆகவே இனிவரும் காலங்களில் சங்க அளவில் கடன் வழங்குவது குறித்து தக்க தெளிவுரைகள் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுத்தி திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர், லால்குடி, புள்ளம்பாடி, மணிகண்டம் அந்தநல்லூர், திருவெரும்பூர் உள்ளிட்ட ஆறு ஒன்றியங்களைச் சேர்ந்த தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுப் பணியாளர்கள், நியாய விலைக் கடை பணியாளர்கள் என 500க்கும் மேற்பட்டோர் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 

 

 

சார்ந்த செய்திகள்