திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா பூத்தமலர் மற்றும் பூச்சொரிதல், பூத்தேருடன் தொடங்கியது.
திண்டுக்கல்லில் கோட்டை மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோயிலாக விளங்கி வருகிறது. இந்த கோவிலில் மாசித் திருவிழா பூத்த மலர் அலங்காரத்துடன் நேற்று தொடங்கியது. அதையொட்டி திண்டுக்கல் பூத்த மலர் அலங்காரம் மண்டகப்படி குழு சார்பில் அம்மனுக்கு பால், பழம், வாசனை திரவியங்கள் உட்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது.

அதன் பிறகு மதியம் மண்டகப்படி குழு தலைவரும் கொடை வள்ளலும்மான ஜி.சுந்தரராஜ் தலைமையில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாலை 6 மணியளவில் அம்மனின் அலங்கார தரிசனம் நடைபெற்றது. இந்த மாசித் திருவிழாவில் கோவிலின் உள் மற்றும் புதுமண்டபத்தில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் மாக் கோலம், பூக்கோலம் வரையப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது வழக்கம். அதன்படி மூலவர் அம்மனுக்கு வண்ண மலர்களாலும், நாயகி சர்வாலங்கார முன்மண்டபத்தில் ஸ்ரீ லலிதாம்பிகை அலங்காரமும், புதுமண்டபத்தில் சீனிவாசப்பெருமாள் விஸ்வரூப தரிசன அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மாலையில் பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மாசித் திருவிழாவின் முதல் நாள் என்பதால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

அதுபோல் இரண்டாம் நாளான இன்று, ஐயப்பன் பூச்சொரிதல் விழா தலைவர் சிவசக்தி நாகராஜன் சார்பில் பூச்சொரி, பூத்தேர் மண்டகப்படியில் நடைபெற்றது. இந்த பூத்தேரை திண்டுக்கல் கொடை வள்ளல் சுந்தர்ராஜ் .கோவில் நிர்வாக அறங்காவலர் முத்தரசன் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் எம்பி கடிகார உலகம் உரிமையாளர் பிச்சை மாணிக்கம் ஆகியோர் பூத்தேரை தொடங்கி வைத்தனர்

இப்படி மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட பூத்தேர், நகரின் முக்கிய வீதி வழியாக கோட்டைமாரியம்மன் பூத்தேரில் பவனி வந்தார். அதைக் கண்டு அங்கங்கே பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் பெருந்திரளாகதிரண்டு நின்று பூத்தேரில் வந்த மாரியம்மனுக்கு பூக்களை கொடுத்து தரிசனம் செய்தனர். இப்படி மாரியம்மனை காண வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அங்கங்கே அன்னதானம்,நீர்மோர், பால், பிஸ்கட் உள்பட உணவு பொருட்களை சமூக ஆர்வலர்கள் வழங்கினார்கள். அதேபோல் கோட்டை மாரியம்மன் மாசி திருவிழாவை கடந்த 16 வருடங்களாக லோக்கலில் உள்ள சூப்பர் டிவி நேரடி ஒளிபரப்பு செய்வதன் மூலம் கோட்டை மாரியம்மன் தரிசிக்க வரமுடியாத பொதுமக்கள் கூட வீட்டில் இருந்தவாறே அம்மனை தரிசித்து வருகிறார்கள்.இந்த பூத் தேர் பவனி மூலம் திண்டுக்கல் நகரமே ஸ்தம்பித்தது. அதனால் போக்குவரத்தும் பல பகுதிகளில் மாற்றப்பட்டது.