வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா மலைக்கிராமத்தைச் சேர்ந்த சின்னி - கோவிந்தன் தம்பதிக்கு கடந்த 27-ம் தேதி இரவு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், சாதாரண வார்டுக்கு குழந்தையுடன் சின்னி மாற்றப்பட்ட நிலையில், 31-ம் தேதி காலை 8-மணி அளவில் சின்னியின் கணவர் உணவு வாங்கி கொடுத்துவிட்டு, வார்டுக்கு வெளியே சென்ற நிலையில் சின்னி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது குழந்தை அழுததாகச் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் வார்டில் இருந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர், சின்னியிடம் பேச்சுக் கொடுத்து குழந்தையைப் பார்த்துக் கொள்வதாகக் கூறி அவரை சாப்பிடச் செல்லியிருக்கிறார். பின்பு, குழந்தையைத் தாலாட்டுவது போல் தாலாட்டிக்கொண்டு வார்டுக்கு வெளியே வந்த இடையன்சாத்து பகுதியைச் சேர்ந்த வைஜெயந்திமாலா(38) என்ற பெண் குழந்தையைத் துணிப்பையில் போட்டுக் கடத்திச் சென்றது தெரியவந்து. இது மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, குழந்தையைப் பிரசவ வார்டிலிருந்து கட்டைப்பையில் கடத்தி கர்நாடக மாநிலம் சிக்பல்லாபூருக்கு கொண்டுச் செல்லப்பட்டதைக் கண்டுபிடித்த தனிப்படை போலீசார் உடனடியாக கர்நாடக மாநிலம் விரைந்தனர். சிக்பல்லாபூரில் லீலாவதி என்பவரைப் பிடித்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், பெங்களூரைச் சேர்ந்த அஜய்குமார் - ஐஸ்வர்யா தம்பதியினருக்குத் திருமணமாகி நீண்ட காலமாகக் குழந்தை இல்லாததால், அவர்கள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் லீலாவதியிடம், பணத்தை கொடுத்து தங்களுக்குக் குழந்தை ஒன்று வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து, அவர்களிடம் வாங்கிய பணத்தை அம்மு(எ)ஞானமணி மற்றும் அவரது கணவர் செல்லதுரை என்பவர்களிடம் கொடுத்து குழந்தை ஒன்றை ஏற்பாடு செய்யுமாறு லீலாவதி கூறியிருக்கிறார். அவர்கள் குழந்தையைக் கொடுக்காமல் பணத்தை மட்டும் வாங்கிக்கொண்டு காலம் தாழ்த்தி வந்துள்ளனர். ஆனால் தொடர்ந்து பணத்தை லீலாவதி கேட்கவே, ஞானமணி இடையஞ்சாத்து பகுதியைச் சேர்ந்த வைஜெயந்தி மாலாவிடம் அரசு மருத்துவமனையில் இருக்கும் ஏதாவது ஒரு குழந்தையைத் திருடி வரும்படி கூறியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து வெங்கடேசன் என்பவரின் உதவியுடன் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டில் இருந்த சின்னியின் குழந்தையை வைஜெயந்தி மாலா கடத்தி வந்ததது தெரியவந்தது. அதன்பின்பு வைஜெயந்தி மாலாவிடம் இருந்து குழந்தை ஞானமணியிடம் சென்று பின்பு அங்கிருந்து கர்நாடக மாநிலம் சிக்பல்லாபூர் சென்று லீலாவதியிடம் கொடுக்கப்பட்டதை கண்டுப்பிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து குழந்தையை மீட்ட போலீசார், குற்றவாளிகளான, வைஜெய்ந்தி மாலா, செல்லதுரை சாலமன், ஞானமணி, பிரிவின் செல்வன், லீலாவதி, அஜய்குமார், ஐஸ்வர்யா ஆகியோரை கைது செய்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். குழந்தை கடத்தப்பட்ட 24 மணி நேரத்தில் மீட்டு தாயிடம் ஒப்படைத்த காவல்துறைக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.