கதிராமங்கலத்தில் ஒ.என்,ஜி,சி நிறுவனத்திற்கு எதிராக போராடியதாக பேராசிரியர் ஜெயராமன், உட்பட மூன்று பெண்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் கதிராமங்கலத்து மக்களோ, நேற்று மாலை முதல் மூன்று பெண்களை காணவில்லை என்றும், அவர்களை ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் கடத்தியதாகவும் அவர்கள் குற்றம்சாட்டி புகார் கூறியிருப்பது சமுக ஆர்வளர்கள் ,பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ,என்,ஜி,சி நிறுவனம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. ஆயில் கொண்டு செல்லும் குழாய்கள் விளைநிலத்திற்கு அடியில் பதித்திருப்பதால் குழாய்கள் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு நிலங்களையும், குடிநீரையும் பாழாக்கிவருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டிவந்தனர்.
இந்தநிலையில் ஒ,என்,ஜி,சி நிறுவனத்தை வெளியேறக் கோரி பல மாதங்களாக பல்வேறு போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின், உள்ளிட்ட அனைத்துக்கட்சி தலைவர்களும் ஆதரவளித்தனர். போராட்டத்தின் காரனமாக சிலகாலம் பனிகளை ஒத்திவைத்திருந்தனர்.
இந்த சூழலில் நேற்று 1.2.2019 ம் தேதி அன்று ஒ.என்.ஜி.சி. அதிகாரிகள் எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் மூன்று வாகனங்களோடு வந்து எண்ணெய் எடுக்கும் குழாய்களில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர். இதனை அறிந்த இப்பகுதி மக்களும் மீத்தேன் எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் விரைந்துவந்து அதிகாரிகளிடம் விவரம் கேட்டனர்.அங்கு அதிகாரிகளுக்கும், போராட்டக்குழுவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கதிராமங்கலம் போராட்டக் குழு தலைவரான ராஜி மற்றும் சித்ரா ஜெயராமன், ஜெயந்தி, கலையரசி உள்ளிட்டவர்களும் இருந்தனர்.
பந்தநல்லூர் காவல்துறையினர் அங்கிருந்த 5 பேர் மீதும் வழக்கு தொடுத்து பேராசிரியர் ஜெயராமனையும் ,ராஜிவையும் அதிரடியாக கைது செய்து கும்பகோணம் சிறையில் அடைத்தனர். மீதமுள்ள மூன்று பெண்களையும் நேற்று மாலை முதல் காணவில்லை என்றும் அவர்களை ஒ.என்.ஜி.சி. அதிகாரிகள் கடத்திவிட்டதாகவும் இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் , காணாமல் போன மூன்று பெண்களையும் காவல்துறையினர் உடனடியாக கண்டுபிடித்து தரவேண்டும், ஓஎன்ஜிசி நிறுவனம் கிராமத்தை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.