Skip to main content

காரமடை விவசாயிகள் எதிர்ப்பு; கால் கடுக்க நிற்கும் மக்னா

Published on 24/02/2023 | Edited on 24/02/2023

 

Karamadai Farmers struggle... Magna is standing on

 

தமிழக வனத்துறையினரால் கோவையில் பிடிபட்ட மக்னா யானை காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் விடுவதற்கு காரமடை பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 

கோவையில் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பிடிக்கப்பட்ட மக்னா யானையை காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட முள்ளி வனப்பகுதியில் விடுவதற்கு வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்காக பிடிபட்ட மக்னா யானையை லாரி மூலம் காரமடை வெள்ளியங்காடு சாலைக்கு கொண்டு வந்தனர். இதனையறிந்த வெள்ளியங்காடு ஊர் மக்கள் மற்றும் அந்த பகுதி விவசாயிகள் யானையை கொண்டு வந்த தமிழ்நாடு வனத்துறை லாரியை முற்றுகையிட்டு நிறுத்தி யானையை திரும்பிக் கொண்டு செல்லுமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இங்கே மக்னாவை விட்டால் மீண்டும் ஊருக்குள் வந்து மக்களுக்கு அச்சுறுத்தலை கொடுக்கும். விளைநிலங்களை வீணடிக்கும் என விடிய விடிய போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய மக்களுடன் வனத்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் யானை மேட்டுப்பாளையம் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் உள்ள வனத்துறை மரக்கிடங்கில் லாரியுடன் மக்னா யானை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை உயர் அதிகாரிகள் எந்த வனப்பகுதியில் விடுவது என முடிவெடுக்காததால் கால் கடுக்க லாரியில் நிற்கிறது மக்னா.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘வெள்ளியங்கிரி மலைக்கு செல்வோர் கவனத்திற்கு...’- வனத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Important information for Velliangiri hill travelers

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இத்தகைய சூழலில் சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம் கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.