Skip to main content

தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி கனிமொழி மனு! -பதிலளிக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு!

Published on 01/02/2020 | Edited on 01/02/2020

தனக்கெதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க,  மனுதரார் முத்துராமலிங்கம் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

KanimozhiPetition-chennai highcourt

 



கடந்த ஆண்டு நடைபெற்ற தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் கனிமொழி வெற்றி பெற்றதைச் செல்லாது என அறிவிக்கக்கோரி தமிழிசை செளந்தரராஜன், அத்தொகுதி வாக்காளர் சந்தானகுமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதில்,  தமிழிசை செளந்தரராஜன்  தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதால், அவருக்குப் பதிலாக தேர்தல் வழக்கை ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி முத்துராமலிங்கம் நடத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டது.

இந்நிலையில்,  வாக்காளர் சந்தான குமார் தொடர்ந்த வழக்கிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்து 30-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து,  இந்த வழக்குகள் நீதிபதி எஸ். எம். சுப்பிரமணியம் முன்  31-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது சந்தான குமார் தொடர்ந்த வழக்கிற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக  கனிமொழி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம்,  முத்துராமலிங்கம் தாக்கல் செய்த மற்றொரு வழக்கை நிராகரிக்கக்கோரி கனிமொழி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

 

KanimozhiPetition-chennai highcourt

 



அதில், தனக்கெதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லாமல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேர்தலில் பணம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை பொறுத்தவரை, யாருக்கு, எங்கு பணம் கொடுக்கப்பட்டது என்பதை வழக்கு தொடர்ந்தவர் மனுவில் தெரிக்கவில்லை என்றும், தன்னுடைய வேட்புமனு குறைபாட்டுடன் இருப்பதற்கான ஆதாரத்தை தனக்கெதிரான தேர்தல் வழக்கு மனுவில் தெரிவிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் முறையான வருமான வரி செலுத்தி இருப்பதாகவும், கணவருக்கு பான் கார்டு இல்லை என்பதையும் முழு விவரங்களுடன் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளதால்,  முத்துராமலிங்கம் தொடர்ந்த வழக்கு ஏற்புடையது அல்ல என்றும்,  அதை நிராகரிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவுக்கு, முத்துராமலிங்கம், தேர்தல் ஆணையம், தூத்துக்குடி தேர்தல் அதிகாரி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் முதல் வாரத்திற்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
 

சார்ந்த செய்திகள்