கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வாழ்கிறார்கள். இன்னும் இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் நிறைவு பெறாத நிலையில் உள்ளது. இந்நிலையில், மலையில் உள்ள ஆலனூர் கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் மனைவி மல்லிகா (வயது 24). கூலித் தொழிலாளிகளான இவர்கள் இருவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் மல்லிகா கருவுற்றார்.
இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியான மல்லிகாவுக்கு நேற்று முன்தினம் மாலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவரது உறவினர்கள் அவரை உடனடியாக சேராப்பட்டு அரசு சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு பணியில் இருக்க வேண்டிய மருத்துவர் வீட்டிற்கு சென்றுவிட்ட நிலையில், இரவு சுமார் 8 மணியளவில் மல்லிகாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த 10 நிமிடங்களில் குழந்தை இறந்துபோனது. பிரசவித்த தாய் மல்லிகாவிற்கு ரத்தப்போக்கு அதிகரித்துள்ளது. அங்கு பணியில் இருந்த செவிலியர்கள் மல்லிகாவின் உறவினர்களிடம் ரத்தப்போக்கை நிறுத்துவதற்கு கிளாங்காடு சுகாதார நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து மருந்து வாங்கி வரும்படி கூறியுள்ளனர். அவர்களும் கிளாங்காடு சுகாதார நிலையம் சென்று மருந்து வாங்கி வந்தனர். அதற்குள் இரவு 9.30 மணியளவில் ரத்தப்போக்கு காரணமாக மல்லிகாவும் உயிரிழந்துவிட்டார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த செவிலியர்கள் மல்லிகாவின் உறவினர்களை சுகாதார நிலையத்தை விட்டு வெளியே அனுப்பிவிட்டு மருத்துவமனை கதவை உள்புறம் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டனர். அன்று அதிகாலை 1 மணியளவில் அந்த சுகாதார நிலையத்தின் பணி மருத்துவர் அங்கு வந்துள்ளார். சிகிச்சைக்கு வராத மருத்துவர் குழந்தையும் தாயும் இறந்த பிறகு வந்ததைக் கண்டு ஆத்திரமடைந்த மல்லிகாவின் உறவினர்கள் அங்கிருந்த டேபிள், சேர், டிவி உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். அதோடு மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ரமேஷ், கச்சராபாளையம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த சேராப்பட்டு பகுதிக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தாயும் குழந்தையும் உயிரிழக்கக் காரணமான பணி மருத்துவர், பிரசவம் பார்த்த செவிலியர் ஆகியோரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். கோட்டாட்சியர் பவித்ரா மற்றும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டனர். இதனால் சேராப்பட்டு - மூலக்காடு பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கரியாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.