Skip to main content

லஞ்ச வழக்கில் இரண்டு அரசு ஊழியர் மீது வழக்கு!

Published on 07/01/2021 | Edited on 08/01/2021

 

kallakurichi incident

 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலவிடுதி மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளிகளில் 65 சமையலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த 28-ம் தேதி நேர்காணல் நடத்தப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில் மாவட்ட பழங்குடியினர் நலத்திட்ட அலுவலர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிக் கொண்டு பணி நியமனம் செய்து வருவதாகப் புகார் எழுந்தது.

 

இதனையடுத்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 4-ஆம் தேதி கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பழங்குடியினர் நல அலுவலகத்தில் அதிரடியாகப் புகுந்து சோதனை செய்தனர். மேலும் அலுவலகத்தில் இருந்த அனைவரையும் அழைத்து விசாரணை செய்தனர். அப்போது அலுவலக உதவியாளர் செல்வராஜ் மற்றும் இளநிலை பொறியாளர் எழில்மாறன் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், சமையலர் பணியிடங்களுக்கு பலரிடம் அவர்கள் லஞ்சமாகப் பணம் வாங்கியது தெரியவந்துள்ளது.

 

இதையடுத்து அலுவலகம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரில் சோதனை செய்ததில் 31,500 ரூபாய் பணம் இருந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அலுவலர் செல்வராஜ் வீட்டிற்குச் சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு கட்டுக்கட்டாக ஆறு லட்ச ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, இந்நிலையில் லஞ்சம் வாங்கியதாக அலுவலக உதவியாளர் செல்வராஜ், அவருக்கு உதவியாக இருந்த இளநிலை பொறியாளர் எழில்மாறன் ஆகியோர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

அரசுப் பணிக்கு லஞ்சம் பெற்றுக் கொண்டு பணி நியமனம் செய்யப்படுவது பகிரங்கமாக வெளிவந்துள்ளது. இதனால் நேர்முகத்தேர்வுக்குச் சென்ற தகுதியுள்ளவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி, இதற்கு உடந்தையாக இருந்த உயர் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

லஞ்சம் கேட்டதால் விவசாயி தீக்குளிப்பு; தி.மலையில் பரபரப்பு

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
 Farmer tried to set himself on fire after asking for bribe; There is excitement in T. Malai

தனது நிலத்திற்கு சிட்டா மற்றும் அடங்கல் கொடுக்க கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் கேட்டதால் விவசாயி உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை அடுத்த தேவனாம்பட்டு கிராமத்தில் செயல்பட்டு வரும் கிராம நிர்வாக அலுவலகத்தில் ஊதிரம்பூண்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமகிருஷ்ணன் என்பவர் தனது நிலத்துக்கான சிட்டா மற்றும் அடங்கல் கேட்டு மனு கொடுத்துள்ளார்.

ஊதிரம்பூண்டி கிராமத்தில் விவசாயி ராமகிருஷ்ணனுக்கு நான்கு ஏக்கர் விவசாய நிலம் உள்ளதாக கூறப்படுகிறது. நான்கு ஏக்கரில் ஆட்டுப் பண்ணை வைத்து விவசாயம் செய்து வருகிறார். கடந்த ஒரு மாதமாக தேவனாம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் காந்தி என்பவரிடம் சிட்டா மற்றும் அடங்கல் கேட்டு மனு கொடுத்துள்ளார். அந்த மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிராம நிர்வாக அலுவலர் கிடப்பில் போட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று மீண்டும் விவசாயி ராமகிருஷ்ணன் கிராம நிர்வாக அலுவலர் காந்தியை நேரில் சந்தித்து தனது நிலத்திற்கு சிட்டா மற்றும் அடங்கல் கொடுக்கும்படி வலியுறுத்தியுள்ளார். அதெல்லாம் கொடுக்க முடியாது, பணம் தந்தால் தான் வேலை நடக்கும் என சொன்னதோடு ஒருமையில் பேசியதால் மனமுடைந்த விவசாயி கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வெளியே தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்துள்ளார்.

அவரின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து உடலில் தீப்பற்றி எரிந்ததை கண்டு தீயை அணைத்து உடனடியாக வாழையிலை, வாழை சாறு உள்ளிட்டவற்றை உடல் மீது ஊற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உடனடியாக வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

விவசாயி ராமகிருஷ்ணன் சிட்டா மற்றும் அடங்கல் கேட்டு கிராம நிர்வாக அலுவலர் காந்தி கொடுக்க மறுத்ததால் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சம்பவம் குறித்து கலசப்பாக்கம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லஞ்சம் கேட்டு கிராம நிர்வாக அலுவலர் விவசாய நிலத்திற்கு சிட்டா மற்றும் அடங்கல் கொடுக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மாணவர்களைக் கொண்டு சுத்தம் செய்யும் அரசுப் பள்ளி? தட்டிக்கேட்டவரை வீடு புகுந்து தாக்கிய கொடூரம்!

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
Government school cleaning with students

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ளது பைத்தன்துறை கிராமம். இந்தக் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களைக் கொண்டு பள்ளியைச் சுத்தம் செய்து வருவதாகவும் மாணவர்களைக் கொண்டு குப்பை அல்ல செய்வதாகவும் அதே கிராமத்தைச் சேர்ந்த தீனதயாளன் என்பவர் பள்ளியில் உள்ள ஆசிரியரிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.

துப்புரவு பணியாளர்கள் மற்றும் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றுவர்களைக் கொண்டு சுத்தம் செய்தால் இன்னும் நன்றாக சுத்தம் செய்யலாமே எனச்சொல்லி உள்ளார். இது பற்றி அதிகாரிகளுடன் புகார் தெரிவிப்பேன் இனி எப்படி நடக்கக் கூடாது எனக் கூறிச்சென்றுள்ளார்

இந்த நிலையில், மாணவர்களை எப்படி சுத்தம் செய்ய வைப்பீர்கள் என நீ எப்படி கேட்கலாம் எனப் பைத்தம்துறை ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் முத்துசாமி மற்றும் அவரது சகோதரர் ஊர் காவல் படையைச் சேர்ந்த சண்முகம் ஆகிய இருவர் பைத்தன்துறை பேருந்து நிறுத்தத்தில் மளிகை கடை மற்றும் வீடு வைத்துள்ள தீனதயாளனின் இடத்திற்கு சென்று தகாத வார்த்தையில் திட்டி மிரட்டி  உள்ளனர்.

அப்போது கடையிலிருந்து வெளியே வந்த தீனதயாளன், அவர்களிடம், “நான் எனது கருத்தை மட்டுமே கூறினேன்..” எனப் பேசிக் கொண்டிருந்தபோது, ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் முத்துசாமி என்பவர் தீனதயாளனைக் காலணியால் அடித்து  அவரைக் கீழே தள்ளி சரமாரியாக தாக்கினார். மேலும் அவரது சகோதரர் ஊர் காவல் படையைச் சேர்ந்த சண்முகம் என்பவரும் தீனதயாளனை தாக்கியுள்ளார்.

பள்ளி மாணவிகளுக்காக கேள்வி எழுப்பியவரை தாக்கியவர்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. தன்னைத் தாக்கிய ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் முத்துசாமி மீதும், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த சண்முகம் என்பவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சின்ன சேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

மாணவர்களைச் சுத்தம் செய்ய வைக்க வேண்டாம் எனக் கருத்து கூறிய நபரை ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் சரமாரியாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.