Skip to main content

முறையற்ற கருக்கலைப்பு... ஆபத்தான நிலையில் பெண்... ஓய்வு பெற்று நர்ஸ் கைது!

Published on 10/06/2020 | Edited on 10/06/2020

 

   Kallakurichi - abortion - Retired Nurse Arrested


கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது மணக்குப்பம் கிராமம். இந்தகிராமத்தைச் சேர்ந்தவர் அர்ச்சுனன்.  இவருடைய மனைவி சிவலட்சுமி(36). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் என இரு குழந்தைகள் உள்ளனர். மேற்படி இரு குழந்தைகளும் பிரசவத்தின்போது சிசேரியன் ஆபரேஷன் மூலம் பிறந்துள்ளனர். 
 


அதன் பிறகு சிவலட்சுமி உடல் வலுவின்றி இருந்துள்ளார். இதனால் அவர் கருத்தடை செய்து கொள்ளவில்லை எனத் தெரியவருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் சிவலட்சுமி மீண்டும் கர்ப்பம் அடைந்தார். ஏற்கனவே இரு குழந்தைகள் உள்ளன. மேலும் சிசேரியன் மூலம் மூன்றாவது குழந்தை பெற்றெடுத்தால் உடல்நிலை மோசமாகி\விடும் எனவே வயிற்றில் வளரும் குழந்தை தேவையா? என்று கணவன் மனைவி இருவருக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிவலட்சுமி வயிற்றில் வளரும் கருவைக் கலைத்துவிட முடிவு செய்துள்ளனர் கணவன் மனைவி இருவரும்.

திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ராஜாமணி, தற்போது மணம்பூண்டி கிராமத்தில் பெண்களுக்குக் கருக்கலைப்புச் செய்வதாக அறிந்து சிவலட்சுமி அவரிடம் சென்றுள்ளார். பின்னர் அவருக்கு ராஜாமணி கருக்கலைப்பு மருத்துவம் பார்த்துள்ளார். ஆனால் சிறிது நேரத்திலேயே சிவலட்சுமியின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உறவினர்கள் அவரை மீட்டுத் திருக்கோயிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிவலட்சுமி இப்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையில் உள்ளார்.
 


அவரிடம் அங்கிருந்த மருத்துவர்கள் அவரது உடல்நலம் பாதிப்பு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரித்தபோது, சிவலட்சுமி முறையற்ற கருக்கலைப்புச் செய்தது தான் காரணம் எனக் கண்டறிந்தனர். உடனடியாக இதுகுறித்து திருக்கோவிலூர் அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி அலமேலு அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் அரகண்டநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாண்டியனைப் இன்ஸ்பெக்டர் சப் இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன் பொன்னுரங்கம் மற்றும் சக போலீசாருடன் மணம்பூண்டி கிராமத்திற்குச் சென்று ஓய்வு பெற்ற செவிலியர் ராஜா மணியை கைது செய்தனர். 

இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட குடும்ப நலப்பணிகள் துறை இணை இயக்குநர் டாக்டர் சமுத்திரக்கனி தலைமையிலான குழுவினர் மணம்பூண்டி கிராமத்திற்கு விரைந்து வந்து ராஜாமணியின் வீட்டைத் திடீர் சோதனை நடத்தினார்கள்.  அப்போது அந்த வீட்டில் கருக்கலைப்புக்குப் பயன்படுத்தப்படும் சாதனங்கள் ஊசி மருந்துகள் மாத்திரைகள் உபகரணங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் ராஜாமணியின் வீட்டைப் பூட்டி சீல் வைத்துள்ளனர்.
 

http://onelink.to/nknapp


இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிராமத்துப் பெண்களிடம் இன்னும் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் கருக்கலைப்புக்காக முறையான மருத்துவர்கள் மருத்துவமனைக்குச் செல்லாமல் இதுபோன்ற செவிலியர்களிடமும் நாட்டு மருத்துவர்களிடமும் சென்று கருக்கலைப்புச் செய்துகொள்வதால் தான் அவர்கள் உயிருக்கும் உடலுக்கும் மிகவும் ஆபத்தான நிலை ஏற்படுகிறது. எனவே கிராமப்புறங்களில் இதுபோன்ற சிக்கலான கருக்கலைப்புப் பிரச்சினைகளை கிராமச் சுகாதார நிலையங்கள் மற்றும் அனுபவமுள்ள மருத்துவர்களிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

 

சார்ந்த செய்திகள்