கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்திற்குத் தகுதியான பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் வகையில் விண்ணப்ப விநியோகம் கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. இதையடுத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பதிவு செய்யும் முகாமைத் தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 24 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் மொத்தமாக 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. மேலும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத் தகவல்களைச் சரிபார்க்கும் கள ஆய்வுப் பணிகள் நடைபெற்று வந்தன. இது மட்டுமின்றி ரூ.1000 பெற உள்ள குடும்ப தலைவிகளுக்கு என பிரத்தியேக ஏடிஎம் கார்டுகளை வழங்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதே சமயம் முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 11 ஆம் தேதி தனது முகாம் அலுவலகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கப்படவுள்ளதையொட்டி இத்திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அந்த கூட்டத்தில் அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவுரைகளை வழங்கி இருந்தார்.
இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தும் பொருட்டு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு தகுதியான பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு ஒரு ரூபாய் அனுப்பி சோதனை செய்யப்பட்டன. ஒரு ரூபாயை அனுப்பிய உடன் பயனாளிகளின் கைப்பேசிக்கு இது குறித்த தகவல்கள் குறுஞ்செய்தி வழியாக தகவல் தெரிவிக்கப்பட்டன. தவறான வங்கி கணக்குகளுக்கு மகளிர் உரிமைத் தொகை செல்லக் கூடாது என்பதற்காக சோதனை அடிப்படையில் ஒரு ரூபாய் வங்கி கணக்குகளுக்கு அனுப்பி பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேற்று மதியத்தில் இருந்தே ரூ. 1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான இன்று (செப்டம்பர் 15) காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் காலை 10 மணிக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முறைப்படி தொடங்கி வைக்கிறார். முன்னதாக காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகம் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளார். அதனை தொடர்ந்து சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்திற்கு சென்று அங்கும் மரியாதை செய்கிறார்.