தமிழ்நாடு அரசின் பொறுப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை ஏற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் ஐந்து அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஒன்றாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேர சிற்றுண்டி திட்டம். இதற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்று அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்புகளையும் நிறைவு செய்து இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு முன்மாதிரி மாநிலமாக மாற்றிவரும் முதலமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வாழ்த்திப்பாராட்டுகிறேன்.
ஓராண்டு நிறைவையொட்டி ஐம்பெரும் அறிவிப்புகள். குறிப்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கப்படும் அறிவிப்பு மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறது. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களிலிருந்துதான் குழந்தைகளில் அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள். பெரும்பாலான மாணவர்கள் காலை உணவு சாப்பிடாமல் வருவதால் ஒருவிதமாக சோர்வாகவே காணப்படுவார்கள்.
இதனால் கல்வியில் கவனம் செலுத்தமுடியாது. உடலும் உள்ளமும் ஒருசேர அமைந்தால்தான் கற்றலும் கற்பித்தலும் சிறப்பாக நடக்கும். இதனையறிந்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தும் அதற்கு முன்மாதிரியாக நான் பணிபுரியும் பள்ளியில் 2018 முதல் 2020 மார்ச் மாதம் வரை (கொரொனாவிற்கு முன்பு) காலைச் சிற்றுண்டி வழங்கினேன் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநிலம் முழுதும் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலைச்சிற்றுண்டி வழங்கவேண்டும். உடலும் உள்ளமும் ஒருசேர இருந்தால்தான் கற்றல்-கற்பித்தலில் கவனம் செலுத்தமுடியும் என்பதை அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தியதன் பேரில் ஆட்சிக்கு வந்த ஓராண்டு நிறைவில் வரலாற்றுச் சிறப்பிக்க அறிவிப்பை வெளியிட்டு ஒட்டுமொத்த பெற்றோர்களின் வயிற்றிலும் பாலை வார்த்திருக்கிறார் முதல்வர்.
இதன் மூலம் கல்வித்திறன் வளர்வதோடு மாணவர் சேர்க்கையும் அதிகரிக்கும் என்பதில் மிகையில்லை. மேலும் குழந்தைகளின் ஊட்டச்சத்தையும் போக்கும் திட்டம், மேல்நிலைப்பள்ளிகள் அனைத்து வசதிகளையும் கொண்ட தகைசால் பள்ளிகள் அறிவிப்பு மேலும் ஒரு மைல்கல். மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க 5 அறிவிப்புகளை அறிவித்த மாண்புமிகு முதலமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கல்வியினை தரம் உயர்த்தும் வகையில் முதற்கட்டமாகத் தொடக்கப் பள்ளிகளை மாதிரிப் பள்ளிகளாகவும் மாற்றுவதற்கு பரிசீலனை செய்தும், காலைச் சிற்றுண்டித் திட்டம் படிப்படியாக உயர்நிலைப்பள்ளி வரை உயர்த்திடவும் காலைச் சிற்றுண்டி திட்டத்திற்கு ‘டாக்டர். கலைஞர் காலைச் சிற்றுண்டி திட்டம்’ என்று பெயர் சூட்டிட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.