Skip to main content

‘கூல் லிப்பை ஏன் நாடு முழுவதும் தடை செய்யக்கூடாது?’ - நீதிபதி சரமாரி கேள்வி!

Published on 12/09/2024 | Edited on 12/09/2024
the judge questioned Why shouldn't cool lip be banned across the country

ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் கோரும் வழக்குகள்  உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பாக விசாரணைக்காக பட்டியலிடப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று மத்திய, மாநில வழக்கறிஞர்களை அழைத்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, கூல் லிப் போன்ற போதைப் பொருள்கள் தொடர்பாக ஏராளமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அதில் அவர், ‘தமிழ்நாட்டில் கூல் லிப் போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்த வழக்குகளில் ஜாமீன் கோரி ஏராளமான மனுத் தாக்கல் செய்து வருகின்றனர். குறிப்பாக பள்ளி மாணவர்கள், இந்த போதைப் பொருளுக்கு அடிமையாக இருப்பது தெரிய வருகிறது. தமிழ்நாட்டில், கூல் லிப் உள்ளிட்ட போதைப் பொருளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், பிற மாநிலங்களில் இது அனுமதிக்கப்படுகிறது. அத்தகைய பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களில் இருந்து ஜிஎஸ்டி வரியே வசூலிக்கப்படுகிறது. சமீப காலமாக பள்ளி மாணவர்கள் சண்டையிட்டு கொள்வது போன்ற சம்பவங்கள் அதிகரிக்க, இது போன்ற போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்ததே காரணம். 

இளம் தலைமுறையினரின் சிந்திக்கும் திறன், இதனால் முற்றிலுமாக மறைந்து வருகிறது. நமது குழந்தைகளை நாம் எவ்வாறு பாதுகாக்க போகிறோம்?. தொடர்ச்சியாக போதை பொருட்களை விற்பனை செய்தால் அவர்களை கைது செய்கிறோம், அவர்களும் பின்னர் ஜாமீனில் வெளியே வந்துவிடுகிறார்கள். விற்பனை செய்த கடையும் மூடப்படுகிறது, பின்னர் 15 நாட்களுக்கு பின்னர் வழக்கம்போல் செயல்படத் தொடங்குகிறது. போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்குவது, மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது போன்ற எவ்விதமான நடவடிக்கைகளை எடுக்கலாம் என முடிவு செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் கூல் லிப் எனும் போதைப் பொருட்கள் பயன்படுத்துவோர் இருப்பதாக தெரிகிறது. எனவே, இந்த போதைப் பொருட்களை பாதுகாப்பற்ற உணவுப் பொருளாக அறிவித்து, அதனை இந்தியா முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது?.  இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டு இந்த விஷயத்தை செப்டம்பர் 20ஆம் தேதி உத்தரவிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்