Skip to main content

தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே! -தமிழ்த்தேசியப் பேரியக்கத்தினர் போராட்டம்!

Published on 15/09/2020 | Edited on 15/09/2020

 

Jobs in Tamil Nadu are for Tamilians! - Tamil thesiyea perayakkam


தமிழ்நாட்டு வேலை தமிழர்களுக்கே எனும் முழக்கத்துடன் திருச்சி பொன்மலையில் அமைந்துள்ள மத்திய தொழிற்சாலை முன்பு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தினர் தொடர்ந்து மூன்று நாட்களாக போராடிவருகின்றனர்.

 

இதன் தொடர்ச்சியாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டு வேலை தமிழர்களுக்கே!” என்ற முழக்கத்தோடு, திருச்சி பொன்மலை தொடர்வண்டித்துறை தொழிற்சாலை முன்பு தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுக்கும் ஒருவாரம் தொடர் மறியல் போராட்டத்தின், நான்காம் நாள் போராட்டம் இன்று (15.09.2020 - செவ்வாய்) காலை நடைபெற்றது.
 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலுள்ள இந்திய அரசு அலுவலகங்களில், தொழிற்சாலைகளில் தொடர்ந்து வடமாநிலத்தவர் உள்ளிட்ட வெளி மாநிலத்தவரை இந்திய அரசு பணியமர்த்தி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக, கரோனா முழுமுடக்கக் காலத்திலும் தமிழ்நாட்டு இரயில்வேயில் 3,218 பேரை வேலையில் சேர்த்துள்ளது. இவர்களில் 90 விழுக்காட்டினருக்கு மேல் இந்திக்காரர்களும், பிற அயல் மாநிலத்தவர்களும் ஆவர். திருச்சி பொன்மலை தொடர்வண்டித் தொழிற்சாலையில் அண்மையில் பணியில் சேர்க்கப்பட்ட 541 பேரில், 400 பேர்க்கும் மேல் இந்திக்காரர்கள்! இதே இரயில்வேத் துறையில் இரண்டாண்டு பழகுநர் (Act Apprentice) பயிற்சி முடித்த பல்லாயிரக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள் வேலையின்றி வறுமையில் வாடுகின்றனர். அவர்களைப் புறக்கணிக்கிறது இரயில்வே!

 

அ.இ.அ.தி.மு.க. ஆட்சி 2016 -இல் தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தது. தமிழ்நாடு அரசுப் பணிகளில் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத பிற மாநிலத்தவரும் சேரலாம்; வேலையில் சேர்ந்த பின் இரண்டாண்டுகளில் தமிழ் கற்றுக்கொண்டால் போதும் என்று அத்திருத்தம் கூறுகிறது.

 
ஆனால், கர்நாடகம், குஜராத், மகாராஷ்டிரம், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், இமாச்சலப் பிரதேசம், ஆந்திரம், மத்தியப்பிரதேசம் போன்ற பல மாநிலங்களில் மாநில அரசு, தனியார் துறை, இந்திய அரசு நிறுவனங்களில் மண்ணின் மக்களுக்கு 100 விழுக்காடு, 90 விழுக்காடு, 80 விழுக்காடு - வேலை வழங்க வேண்டும் என்று சட்டங்கள் போடப்பட்டு செயல்படுகின்றன.

 

இந்நிலையில், தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்திலும் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கு வழங்க வேண்டும், 10 விழுக்காட்டிற்கு மேல் உள்ள வெளி மாநிலத்தவரை வெளியேற்ற வேண்டும். கரோனா காலத்தில் தென்னகத் தொடர்வண்டித்துறையில் பணி நியமனம் செய்த 3,218 பேரில் வெளி மாநிலத்தவர்களில் 10 விழுக்காட்டிற்கு மேல் உள்ள அனைவரின் தேர்வையும் இரத்துச் செய்ய வேண்டும், அப்பணி இடங்களைத் தேர்வெழுதிய தமிழர்களுக்கு வழங்க வேண்டும், மற்ற மாநிலங்களில் உள்ளதுபோல் மண்ணின் மக்களுக்கான வேலைச் சட்டத்தைத் தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும்.

 

அமைப்பு சாரா தொழிலாளர் வேலை வழங்கு வாரியம் அமைத்து உடலுழைப்புப் பணிகள் உட்பட அனைத்துப் பணிகளிலும் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் திருச்சி பொன்மலை தொடர்வண்டித்துறை தொழிற்சாலை முன்பு கடந்த 11.09.2020 அன்று தொடங்கி 18.09.2020 வரை ஒரு வாரம் தொடர் மறியல் நடத்தப்படுகின்றது.

 

Ad

 

அதன்படி, இன்று (15.09.2020) செவ்வாய்க்கிழமை காலை, திருச்சி பொன்மலை தொடர்வண்டித் துறைத் தொழிற்சாலை முன்பு – மூன்றாம் நாள் மறியல் போராட்டம் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினரும், தஞ்சை மாவட்டச் செயலாளருமான தோழர் நா. வைகறை தலைமையில் நடைபெற்றது. த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் க. விடுதலைச்சுடர் முன்னிலை வகித்தார். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு பழ. இராசேந்திரன் போராட்டப் பேரணியைத் தொடங்கி வைத்துப் பேசினார்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

 

சார்ந்த செய்திகள்