தமிழகம் முழுவதும் உள்ள ஜாக்டோ ஜியோ அமைப்பு மூலம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22ஆம் தேதி முதல் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் காலைவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இந்த போராட்டத்தின் போது கடந்த 3 நாட்களாக சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் ஆங்காங்கே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
அதன்படி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஒன்பது ஆசிரியர்கள் அரசு பணியாளர்கள் என மொத்தம் 15 பேர் கடந்த 25ஆம் தேதி நள்ளிரவு கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் 26ஆம் தேதி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து அவர்கள் அனைவருக்கும் சம்பந்தப்பட்ட துறை மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏழும் நாள் நடந்த ஜாக்டோ ஜியோ போராட்டம் திண்டுக்கல் யூனியன் ஆபீஸ் அருகே நடந்தது. இதில் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டத்தில் குதித்தனர் . இப்படி போராட்டத்தில் குதித்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை கைது செய்து திண்டுக்கல் நகரில் உள்ள 5-க்கும் மேற்பட்ட திருமண மண்டபத்தில் தங்க வைத்திருந்தனர். இப்படி தங்க வைத்திருந்த ஆசிரியர்கள் அரசு ஊழியர்களை இரவு 9 மணி வரை வெளியே விடாமல் மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தனர். அப்பொழுது போராட்டத்தில் இருந்த அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் விடுதலை செய். விடுதலை செய் இல்லையென்றால் சாப்பாடு போடு என கோஷம் போட்டனர். அப்படி இருந்தும் காக்கிகள் கண்டுகொள்ளவில்லை. இதுபற்றி போராட்டத்தில் ஈடுபட்டு மண்டபத்தில் இருந்த அரசு ஊழியர்கள் சிலரிடம் கேட்டபோது தொடர்ந்து ஏழு நாட்கள் நடந்து வரும் எங்கள் போராட்டத்தை முறியடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தினசரி கைதுசெய்து மண்டபத்தில் அடைத்து விடுகிறார்கள். இப்படி அடைக்க கூடிய எங்களுக்கு சாப்பாடு கூட போடுவதில்லை.
தினசரி மாலை ஆறு மணிக்கு விடுதலை செய்து வந்தனர். ஆனால் தற்பொழுது 91/4 மணி மணிக்கு தான் விடுதலை செய்தனர். ஆனால் விடுதலை செய்வதில் காலதாமதம் ஆவதை கண்டு சாப்பாடு போடச் சொல்லி போலீசாரிடம் வலியுறுத்தியும் கூட கண்டுகொள்ளவில்லை. அந்த அளவுக்கு இந்த எடப்பாடி அரசு போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சாப்பாடு போடக் கூட வக்கில்லை. அதனால எங்க அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் இருந்த அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பிஸ்கட்டுகளும், குடி தண்ணிபாட்டிலையும் வாங்கி கொடுத்தனர். ஆனால் இந்த எடப்பாடி அரசு கடந்த சில நாட்களாகவே ஒவ்வொரு மாவட்டத்திலும் பொறுப்பில் இருப்பவர்களை கைது செய்து வருகிறார்கள். அதுபோல் இன்றைக்கும் எங்க ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த 39 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதை வன்மையாக கண்டிக்கிறோம். உங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று கூறினார்கள்.