தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மாலைக்குள் இன்டர்நெட் சேவை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. அப்போது ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கு காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டதன் காரணமாக கல் வீச்சு, கண்ணீர் புகை, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டன. அதில் போராட்டக்காரர்கள் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவத்தால் தூத்துக்குடியில் 27ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், தூத்துக்குடி துப்பாக்கி சூடு மற்றும் கலவரம் தொடர்பான தகவல்கள் வாட்ஸ்அப், பேஸ்புக் குறுஞ்செய்திகள் மூலமாக பொதுமக்கள் மத்தியில் பரவியது. இதனால் ஏற்பட்ட பதட்டத்தை தணிக்கும் விதமாக தமிழக அரசு தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணைய தள சேவை ரத்து செய்யப்பட்டடது. இதையடுத்து 5 நாட்கள் கழித்து இன்று தூத்துக்குடி நகர் பகுதியில் வழக்கம் போல் டீக்கடைகள், உணவகங்கள், பழக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் நகர, புறநகர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது,
தூத்துக்குடியில் இன்று மாலைக்குள் மீண்டும் இணையதள சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார். தூத்துக்குடியில் 100% கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 90% பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. காவல் துறையினரின் எண்ணிக்கையை குறைக்காமல் தீவிர கண்காணிப்பு பணி நடந்து வருகிறது என கூறினார்.