நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்தது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.
இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கிய நிலையில் இன்று மாலை 6 மணியோடு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார் மன்சூர் அலிகான். பலாப்பழ சின்னத்தில் போட்டியிடும் அவர், தொடர்ச்சியாகக் காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் என வேலூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் அவரது வழக்கமான நக்கல் கலந்த பாணியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதையடுத்து பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று வேலூர் குடியாத்தம் பகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்ட மன்சூர் அலி கானுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை கே.கே.நகரில் உள்ள மருத்துவமனையில் தற்போது மன்சூர் அலிகான் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.