ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உணவு விடுதியில் உணவுத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.
அதன்பிறகு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உணவு பாதுகாப்பு துறை சார்பாக அங்குள்ள விடுதிகள் உணவு விடுதிகளில் ஆய்வு செய்தோம். தமிழகம் முழுக்க இருக்கக்கூடிய மருத்துவக் கல்லூரிகளில் எங்கெங்கு மருத்துவம் பயிலும் மாணவர்கள் தங்கி இருக்கிறார்களோ எல்லா இடத்திலுமே சோதனை செய்ய சொல்லி இருக்கிறார்கள். அதனையொட்டி சென்னையில் ஸ்டான்லியில் மருத்துவமனையில் ஆய்வு செய்து இருக்கிறோம்.
தொடர்ந்து எம்எம்சி, ஓமந்தூரார் இப்படி எல்லா இடத்திலும் சோதனை செய்யப் போகிறோம். மாணவர்களுக்காக இருக்கட்டும் அல்லது மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களாக இருக்கட்டும் யாருக்குமே தரம் தாழ்ந்த உணவு கிடைக்கக் கூடாது இதுதான் எங்களுடைய நோக்கம். ஸ்டான்லி மருத்துவமனையில் நாங்கள் சோதனை செய்த பொழுது எங்களுக்கு முழு திருப்தியாக இருந்தது. நன்றாக வைத்திருந்தார்கள். அங்கு இருக்கும் மாணவர்களிடமும் கேட்டோம், நோயாளிகளிடமும் கேட்டோம். இங்கே இருக்கக்கூடிய உணவு விடுதிகளில் உணவு எப்படி இருக்கிறது என்று கேட்டோம் அவர்கள் எல்லாரும் நல்லா இருக்கு என்று சொன்னார்கள். இதேபோல எல்லா மருத்துவக் கல்லூரிகளிலும் விடுதிகளிலும் எங்களுடைய சோதனை தொடரும்'' என்றார்.