Skip to main content

பிள்ளைகளின் உயிரோடு விளையாடும் தனியார் பள்ளி, கல்லூரிகள்...

Published on 11/11/2019 | Edited on 11/11/2019

கடந்த அக்டோபர் மாதம் நான்காம் தேதி பெரம்பலூர் தனலட்சுமி கல்லூரியின் இரண்டு பேருந்துகள் போட்டி போட்டுக்கொண்டு அரியலூரில் இருந்து பெரம்பலூர் நோக்கி பயணித்த போது, பள்ளி மாணவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதேபோல கடந்த ஐந்தாம் தேதி கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ளது பிரம் மெட்ரிகுலேஷன் பள்ளியின் வேன்களில் அப்பள்ளி மாணவர்கள் அழைத்துசெல்லப்பட்ட போது, அதில் ஒரு வேனின் ஓட்டுநர் ஏ.சித்தூர் என்ற இடத்தில் செல்போன் பேசியபடி வேனை ஓட்டிச் சென்றுள்ளார். இதனால் வேன் அவர் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது.
 

inexperienced drivers are being used for school and colleges

இதில் விஜய கிருஷ்ணகாந்த், சார்ஜன் நம்பி, வேம்பு கிருஷ்ணன், கோகுலகண்ணன், நரேந்திரன் உட்பட 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ள இந்த மாணவர்களில் 3 பேரின் நிலை மிகவும் மோசமாக இருந்ததால் அவர்களை மேல் சிகிச்சைக்காக கடலூர் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தினால் சாலை போக்குவரத்து ஸ்தம்பித்தது. விபத்தை ஏர்படுத்திய ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

 

பொதுவாக தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள், பிள்ளைகளை அழைத்துச் செல்லும் வாகனங்களை முறையாக பராமரிப்பது இல்லை. மேலும் புது வாகனங்களை வாங்குவதில்லை. வேறு எங்காவது ஓடி தேய்ந்து போன வாகனங்களை வாங்குவது, ஏலத்தில் எடுத்து அதை ஒர்க் ஷாப்பில் கொடுத்து புனரமைப்பு செய்து அதை மீண்டும் இயக்குவது என்றுதான் இருக்கிறது. சில இடங்களில் வாகனங்களை ஓட்டுவதற்கு முறையாக பயிற்சி பெற்று ஓட்டுனர் உரிமம் பெற்றவர்களை கூட நியமிப்பது இல்லை.
 

inexperienced drivers are being used for school and colleges

காரணம், போக்குவரத்து விதிமுறைகளை அறிந்து முறையாக பயிற்சி பெற்ற ஓட்டுனர்களை வேலைக்கு அமர்த்தினால் அதிக சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதால், கிராமப்புறங்களில் முறையான பயிற்சி இல்லாமல் விவசாய டிராக்டர், டாட்டா ஏஸ் போன்ற வண்டிகளை அரைகுறையாக ஓட்டும் ஓட்டுனர்களை தேர்வு செய்து  பள்ளி வேன், பஸ் ஓட்டுவதற்கு நியமிக்கிறார்கள். மேலும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் ஓட்டுனராக இருந்து வயது மூப்பின் காரணமாக ஓய்வு பெற்றவர்களை மீண்டும்  கொண்டு வந்து தங்கள் பள்ளி, கல்லூரி வாகனங்களை ஓட்ட வைக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் உடல் பலம் குறைந்து வாகனங்களை திறமையாக இயக்க முடியாததால் விபத்துகள் ஏற்படுகின்றன. முறையான பயிற்சி இல்லாததாலும், போக்குவரத்து விதிமுறைகள் தெரியாததாலும் கண்டபடி வாகனங்களை ஓட்டி விபத்துக்களை உண்டாக்குகின்றனர்.

 

அப்படிப்பட்டவர்களை பள்ளி, கல்லூரி வாகனங்களை இயக்க சொல்லி அவர்கள் மூலம் விபத்தை ஏற்படுத்தி பிள்ளைகளின் உயிரோடு விளையாடுகிறது தனியார் பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகங்கள். சில இடங்களில், இதனை கண்காணிக்க வேண்டிய அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் பள்ளி, கல்லூரி நிர்வாகிகளிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு இப்படிப்பட்ட தவறுகளை எல்லாம் கண்டுகொள்வதில்லை எனவும் புகார் எழுகிறது. எனவே பள்ளி கல்லூரி வாகனங்களை இயக்குவதற்கு முறையான பயிற்சி, ஓட்டுனர் உரிமம் பெற்றவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என அரசு வலியுறுத்துவதோடு, தனியார் பள்ளி, கல்லூரி நிர்வாகங்களுக்கு கடுமையான விதிமுறைகளையும் வகுத்து உத்தரவிடவேண்டும் என கருத்து எழுந்துள்ளது.
 

inexperienced drivers are being used for school and colleges

பொதுவாக பல தனியார் பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் பிள்ளைகள் படிப்பிற்காக பெற்றோர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்குகிறார்கள். அப்படி வாங்கிய பணத்தில் திறமையானவர்களை ஓட்டுநராக நியமிப்பது இல்லை. இதற்கு அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும், பெற்றோர்களும் குரல் கொடுக்க வேண்டும், அப்போது தான் தங்கள் பிள்ளைகளின் உயிருக்கு உத்தரவாதம் கிடைக்கும்.

சார்ந்த செய்திகள்