சேலம் மாவட்டத்தில் அனைத்து ஒன்றியக்குழுத் தலைவர் பதவியிடங்களையும் அதிமுக கூட்டணியை கைப்பற்றியது.
சேலம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 20 ஒன்றியங்களில் போதிய கோரம் இல்லாததால் கொளத்தூர், தாரமங்கலம் ஆகிய இரு ஒன்றியங்களில் மறைமுகத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, 18 ஒன்றியங்களில் நடந்த மறைமுகத் தேர்தலில் அனைத்து இடங்களிலும் தலைவர் பதவியை அதிமுக கூட்டணியே கைப்பற்றியது.
ஒன்றியங்கள் வாரியாக இடைப்பாடியில் குப்பம்மாள், காடையாம்பட்டியில் மாரியம்மாள், கொங்கணாபுரத்தில் கரட்டூர் மணி, மேச்சேரியில் தனலட்சுமி, பெத்தநாயக்கன்பாளையத்தில் சின்னதம்பி, சங்ககிரியில் மகேஸ்வரி, தலைவாசலில் ராமசாமி, வாழப்பாடியில் சதீஸ்குமார், ஏற்காட்டில் சாந்தவள்ளி ஆகியோர் போட்டியின்றி தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் அதிமுகவினர்.
அதேபோல், நங்கவள்ளி ஒன்றியக்குழுத் தலைவராக, அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவைச் சேர்ந்த பானுமதி என்பவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேர்தல் நடந்த ஆத்தூர் ஒன்றியத்தில் லிங்கம்மாள், அயோத்தியாப்பட்டணத்தில் பார்வதி, கெங்கவள்ளியில் பிரியா, மகுடஞ்சாவடியில் லலிதா, ஓமலூரில் ராஜேந்திரன், பனமரத்துப்பட்டியில் ஜெகநாதன், சேலம் ஒன்றியத்தில் மல்லிகா, வீரபாண்டியில் வருதராஜ் ஆகியோர் தலைவர்களாக வெற்றி பெற்றனர்.