தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறைப் பேரூராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலை நடத்தக் கோரிய வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆடுதுறை பேரூராட்சியில் தி.மு.க. கூட்டணிக் கட்சி கவுன்சிலர்கள் ரகளையில் ஈடுபட்டதால், கடந்த மார்ச் 4- ஆம் தேதி நடக்கவிருந்த மறைமுகத் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில், மறைமுகத் தேர்தலை நடத்தக் கோரி பேரூராட்சியின் எட்டு உறுப்பினர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
குதிரை பேரமும், கட்சித் தாவலும் நடக்க வாய்ப்பிருப்பதால், காவல்துறை பாதுகாப்புடன் தாமதமின்றி மறைமுகத் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு மனுவுக்கு விளக்கம் அளிக்கும்படி மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நாளைக்கு (10/03/2022) தள்ளிவைத்தனர்.