கடலூர் மாவட்டம் விருத்தாசலம் திட்டக்குடி நெடுஞ்சாலையில் உள்ளது ஆவினன்குடி. இங்கு காவல்நிலையம் ஒன்றும்உள்ளது. காவல் நிலையம் அருகில் நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது சின்ராசு என்பவரது வீடு. இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு அதே ஊரில் உள்ள தனது மாமியார் வீட்டில் சென்று மனைவி பிள்ளைகளுடன் கடந்த இரண்டு மாதமாக தங்கியுள்ளார்.
அவ்வப்போது தனது வீட்டிற்கு வந்து பார்த்து செல்வது வழக்கம். அதன்படி நேற்று காலை தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சின்ராசு வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 பவுன் தங்க காயின்கள் டாலர் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இவைகளின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் என்று கூறப்படுகிறது.
இது குறித்து சின்ராசு அளித்த புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது சம்பந்தமாக திட்டக்குடி டி. எஸ்.பி வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு ஆகியோர் சம்பவம் நடந்த வீட்டிற்கு நேரில் வந்து விசாரணை செய்தனர். கடலூரிலிருந்து தடய அறிவியல் துறை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்று விட்டது யாரையும் அடையாளம் காட்டவில்லை. காவல் நிலையம் அருகிலேயே நடந்துள்ள இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.