கல்லணை கால்வாய் கடைமடைப் பாசனப் பகுதியில், ஆழ்குழாய்க் கிணறு அமைத்து மின் மோட்டார் இயக்க மின்சாரம் பெறவும், ஆழ்குழாய்க் கிணறு அமைக்கவும் கல்லணை கால்வாய்ப் பொறியாளர் தடையில்லாச் சான்று வழங்குவதற்கு, லஞ்சம் கேட்டு அலையவிட்டதால் விவசாயி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம், பொறியாளரை சிக்க வைத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி அருகில் உள்ள அத்தாணி கிராமத்தைச் சேர்ந்தர் விவசாயி பிரபாகரன். விவசாயத்திற்காக ஆழ்குழாய்க் கிணறு அமைத்துத் தண்ணீர் இறைக்க இலவச மின்சாரம் பெற கல்லணை கால்வாய் பாசனப் பகுதி என்பதால் தடையில்லாச் சான்று வாங்குவதற்காக, நாகுடி கல்லணை கால்வாய் பொதுப்பணித்துறை அலுவலகத்திற்குப் பலமுறை சென்றுள்ளார். அங்கு உதவி செயற்பொறியாளர் தென்னரசு தடையில்லாச் சான்றிதழ் வழங்க ரூ 5,000 லஞ்சம் கேட்டுள்ளார்.
தன்னை பல நாட்கள் அலையவிட்டு லஞ்சம் கேட்கிறாரே என்று அதிருப்தியடைந்த விவசாயி பிரபாகரன், புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் வழிகாட்டதலில், இன்று விவசாயி பிரபாகரன் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளுடன் சென்று, உதவி செயற்பொறியாளர் தென்னரசுவிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி மணிகண்டன் தலைமையிலான குழுவினர் உதவிப் பொறியாளர் தென்னரசுவைக் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.