நாகையில் பொதுமக்கள் மத்தியில் அதிமுக ஒன்றியச் செயலாளர் அரிவாளுடன் ரகளையில் ஈடுபடும் வீடியோ காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை அடுத்துள்ள செல்லூர் பகுதியில் கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவிற்குப் பிறகு தனியார் நிறுவனத்தால் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் சில தினங்களுக்கு முன்பு பாழடைந்ததால் இடிக்கப்பட்டது. அந்தக் கட்டிடம் இடிக்கப்பட்ட கல் மற்றும் மண்ணை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் வீட்டு வாசலில் கொட்டுவதற்கு அள்ளிச் சென்றுள்ளனர். இதனைத் தெரிந்துகொண்ட நாகை அதிமுக வடக்கு ஒன்றியச் செயலாளர் பன்னீர், குடிபோதையில் கையில் அரிவாளுடன் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டிருக்கிறார்.
அதோடு அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகர் மற்றும் அவரது உறவினர்களைத் தாக்கி ரகளையில் ஈடுபட்ட காட்சிகள் பொதுமக்களால் வீடியோவாகப் பதிவுசெய்யப்பட்டது. அந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
''ஆளுங்கட்சியின் ஒன்றியச் செயலாளரே அரிவாளோடு இப்படிச் செய்யலாமா? சட்டம் ஒழுங்கு சிறப்பா இருக்குன்னு மைக் முன்னாடி வாய்க்கிழிய பேசிவிட்டு பொதுமக்கள் முன்னிலையில் குடிபோதையில் கையில் அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்டால், ரவுடிகள் ஏன் துணிந்து தவறு செய்யமாட்டார்கள்?" என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
அதிமுக ஒன்றியச் செயலாளர் பன்னீரின் மனைவி மகேஷ்வரியோ அந்தப் பகுதியின் ஊராட்சி மன்றத் தலைவியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.