Skip to main content

சீர்காழியில் வாக்கு சீட்டுகளை மாற்றிய மர்ம நபர்கள்; அதிமுக பிரமுகரின் கைவரிசை என வேட்பாளர்கள் வேதனை

Published on 28/12/2019 | Edited on 28/12/2019

 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடத்த முடிவு செய்து 27 ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நடந்து முடித்திருக்கிறது தேர்தல் ஆணையம்.

இரண்டாம்கட்ட தேர்தல் வரும் 3 0ஆம் தேதி நடக்க இருக்கும் நிலையில் நடந்து முடிந்த சீர்காழி ஒன்றியத்திற்கான வாக்குப்பெட்டிகள் உடைக்கப்பட்டிருப்பது பெரும்பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

நாகை மாவட்டம் சீர்காழி ஒன்றியத்திற்கு 27ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்குப்பெட்டிகள் சீர்காழியில் உள்ள விவேகானந்தா பெண்கள் கல்லூரியில் பாதுகாப்போடு வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று மாலை ஆறு பேர் கொண்ட மர்ம நபர்கள் உள்ளே புகுந்து வானகிரிகுப்பம், காவிரிபூம்பட்டினம், திருவாலி,சண்ணாப்பட்டினம் உள்ளிட்ட 13 ஊராட்சிகளின் வாக்குப் பெட்டிகளை உடைத்து அதிலுள்ள வாக்குச்சீட்டுகள் மாற்றியிருக்கின்றனர். அப்படிபட்ட கைவைரிசையில் ஈடுபட்டவர்களில் இரண்டு பேர் உள்ளே மாட்டிக்கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 இது குறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம், " விசாரித்துக் கொண்டிருக்கிறோம் 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் ஒவ்வொரு பெட்டியாக வைக்கப்பட்ட சீலை பிரித்து சீட்டுகளை மாற்றி இருக்கின்றனர். இது வெளியில் தெரிந்து பரபரப்பாகிவிட்டது. நான்கு பேர் தப்பி விட்டனர், இரண்டு பேர் உள்ளே சிக்கிக்கொண்டனர். இந்த கைவரிசையை  அதிமுக ஒன்றிய பிரமுகர் ஒருவரால் முடுக்கிவிடப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. விரைவில் உண்மையை வெளிக்கொண்டு வந்துவிடுவோம்," என்றார்.

போராட்டத்தில் உள்ளவர்களோ, "ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தல் பல்வேறு குளறுபடிகள் நடந்து வருகிறது. எந்த தேர்தலும் கண்டிராத வகையில் உள்ளாட்சித் தேர்தலில் பண பரிவர்த்தனையும், பொருள் பரிவர்த்தனையும் ஜரூராக நடந்து வந்து கொண்டிருக்கிறது. சாதாரணமாக உள்ளாட்சியில் ஊராட்சி உறுப்பினருக்கும், ஊராட்சித் தலைவருக்கும் போட்டியிடுபவர் அதிகபட்சமாக 20 ஆயிரம் வரை செலவு செய்வார்கள். ஆனால் இந்த தேர்தலில் அதிகபட்சமாக 20 லட்சம் வரையும், குறைந்தபட்சம் பத்து லட்சம் வரையும் செய்துள்ளனர். ஒவ்வொரு வீட்டிற்கும் குத்துவிளக்கு முதல் பொங்கல் சீர்வரிசை வரை கொடுத்து வாக்கு சேகரித்துள்ளனர்.  சட்டமன்ற தேர்தலை தாண்டி வாக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்த ஊராட்சிகளும் இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் வாக்குப்பெட்டிகள் உடைக்கப்பட்டிருப்பது வாக்காளர்களையும்,வேட்பாளர்களையும் நிலைகுலையவே வைத்துள்ளது". என்கிறார்கள்.

இதனை அறிந்த போட்டியிட்ட வேட்பாளர்கள் அந்த கல்விக்குழுமத்தின் வாசலில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகை மாவட்டத்தில் முழுவதும் இருந்து காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு பரபரப்பை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்து வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்