
கோவை மாவட்டம் நவ இந்தியா பகுதியில் இந்துஸ்தான் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அதன் அருகிலேயே பாரா மெடிக்கல் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அனுப்பிரியா என்ற மாணவி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில், மாணவி அனுப்பிரியா மருத்துவமனை நான்காவது மாடியில் இருந்து குறித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, மாணவியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாணவியின் தற்கொலைக்கு கல்லூரி நிர்வாகம் தான் காரணம் என்று மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒரு அறையில் ரூ.1,500 பணம் காணாமல் போனதாகவும், இது குறித்து மாணவி அனுப்பிரியாவை மட்டும் தனியாக அழைத்து கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் விசாரணை நடத்தி மன உளைச்சல் கொடுத்ததாகவும், இதன் காரணமாக மாணவி அனுப்பிரியா தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால், கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவியின் பெற்றோர் புகாரில் தெரிவித்துள்ளனர்.
மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார், வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், அனுப்பிரியாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்ட அரசு மருத்துவமனையில் கல்லூரி மாணவர்களும், மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களும் ஒன்றாகக் கூடி கல்லூரி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.