'மனித உயிர் விலை மதிப்பற்றது' எனும் கூற்று சில நேரம் மனிதநேயமற்ற மனிதர்களால் பொய்யாகவே போய்விடுகிறது. அப்படி ஒரு இரக்கமற்ற உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது திண்டுக்கல்லில்.
திண்டுக்கல் கொடைக்கானலில் உள்ள கேசிபட்டியில் சாலை அருகிலுள்ள டீ கடை வாசலில் இளம்பெண் ஒருவர் தனது உடலின் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொள்ள முற்பட்டுள்ளார். ஆனால் டீ கடையில் டீ குடித்தவர்கள் உட்பட சாலையில் நடந்து சென்ற எவரும் அவரை கண்டுகொள்ளவில்லை. அந்த இளம்பெண் பெட்ரோலில் நனைந்த உடலுடன் தீப்பெட்டியை எடுத்து உரச, கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த ஒருவரும் எதற்கு பிரச்னை என்ற எண்ணத்துடன் கையிலிருந்த டீ க்ளாசோடு நகர்ந்தார்.
அழுத கண்ணீருடன் சேலையின் முந்தானையை தீ வைத்துக் கொண்ட அந்த இளம்பெண் சற்று நேரத்தில் உடலெல்லாம் தீ பரவி கொழுந்துவிட என்னை காப்பாற்றுங்கள்.. என்னை காப்பாற்றுங்கள்... என அலறியபடி சாலையில் உருண்டார். அப்பொழுது கூட சிறு சலனம் கூட இல்லாமல் சாலையில் மனிதநேயத்தின் கண்களை கறுப்பு துணியால் கட்டியதைப்போல் திரும்பிக் கூட பார்க்காமல் சென்றது பல மனித தலைகள். இந்தச் சம்பவத்தை கண்டவர்களில் ஒருவர் பதைபதைத்து ஓடிவந்து கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து தீயை அணைக்க முற்பட, சற்று நேரத்தில் அந்த இடம் பரபரப்பாகியது. ஆனாலும் அடுத்த நிமிடத்திலேயே முழுவதுமாக எரிந்து உயிரை விட்டார் அந்த இளம்பெண்.
இதில் மிகவும் கொடுமையான விஷயம் இந்த காட்சிகள் முழுவதும் ஆரம்பத்திலிருந்து இளம்பெண் உயிரிழந்தது வரை ஒருவர் தனது மொபைல் போனில் எந்த ஒரு சலனமும் இன்றி, சிறிதுகூட கேமராவை ஆட்டாமல் முழுவதும் வீடியோ எடுத்துள்ளார் என்பது மனித நேயம் மண்ணில் புதைந்து விட்டதோ என்று எண்ணத்தோன்றும் அளவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ காட்சிகள் பார்க்கவே பதைபதைப்பை ஏற்படுத்துகிறது.
இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்கையில், சாலையில் தீக்குளித்துக் கொண்ட அந்த இளம்பெண் மாலதி என்பதும், கணவரை பிரிந்து வாழ்பவர் என்றும் தெரியவந்தது. அவருக்கு 6 வயதில் மகன் இருந்த நிலையில், ஓட்டுநர் சதீஷ் என்பவர் மாலதியை காதலித்துள்ளார். பெற்றோர்களுக்கு தெரியாமல் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு மூன்று வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில் பெற்றோர் பார்த்த வேறொரு பெண்ணை ஓட்டுனர் சதீஷ் திருமணம் செய்து கொண்டார்.
இந்த தகவலை அறிந்த மாலதி தனக்கு நியாயம் வேண்டும் என சதீஷின் வீட்டிற்குச் சென்றபோது, சதீஷின் உறவினர்கள் மாலதியை அடித்துத் துரத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த மாலதி தேனீர் கடையில் குழந்தையை அமர வைத்துவிட்டு பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீ வைத்துள்ளார். ஆனால் அங்கு இறந்தது 'உயிர்' மட்டுமல்ல 'மனிதநேயமும்' தான்.