கரோனா பொதுமுடக்க காலத்தில் கைசெலவுக்கு காசு இல்லாததால், ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்துச் செலவு செய்து சுற்றிவந்த இரு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் தாளநத்தம் எனுமிடத்தில் உள்ள கடையில் இளைஞர்கள் இருவர் அதிக அளவில் பொருட்களை வாங்கி பணத்தைக் கொடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் இருவரும் கொடுத்த ரூபாய்கள் போலி எனத் தெரிந்ததும் அவர்களிடம் அதுகுறித்து கடை உரிமையாளர் விசாரித்தபோது சுதாரித்துக்கொண்ட அந்த இரு இளைஞர்களும் ஓட்டம் பிடித்தனர்.
இதுதொடர்பாக கடத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக, கடையில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தருமபுரி மாவட்டம் தோரணம்பதியில் ஜெராக்ஸ் கடை வைத்திருந்த பட்டதாரி இளைஞரான ராஜ்குமார் மற்றும் அவருடைய நண்பர் ஆனந்தன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கரோனா பொதுமுடக்க காலத்தில் வருவாய் இல்லாமல் இருந்ததால் கரோனா காலத்தில் கைசெலவுக்கு காசில்லை என ராஜ்குமார் வீட்டிலேயே ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்துப் பொருட்களை வாங்கிச் செலவு செய்தது தெரியவந்தது. அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதோடு, வீட்டிற்குள் வைக்கப்பட்டிருந்த கலர் ஜெராக்ஸ் இயந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டது.