தமிழ்நாட்டில் 2023 - 24 ஆம் கல்வியாண்டுக்கான 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி (26.03.2024) தொடங்கி ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதற்காக மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்து 107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9 லட்சத்து 38 ஆயிரம் பேர் தேர்வு எழுதத் தகுதி பெற்றிருந்தனர். முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது.
இதனையடுத்து 10 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் எழுதிய தேர்வின் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று முடிந்தன. அதனைத் தொடர்ந்து மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணியும் நிறைவு பெற்றது. இத்தகைய சூழலில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் எனப் பலரும் முடிவுகளை எதிர்பார்த்து மாணவர்கள் காத்திருந்தனர்.
அதன்படி, 10 ஆம் வகுப்பு முடிவு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது சென்னையில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்கத்தில் 2023 - 24 ஆம் கல்வியாண்டுக்கான 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று (10.05.2024) காலை 9.30 மணியளவில் வெளியிடப்பட்டன. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, https//results.digilocker.gov.in ஆகிய இணையதள முகவரியில் அறிந்து வந்தனர். வெளியான தேர்வு முடிவுகளின் படி, தமிழகம் முழுவதும் தேர்வு எழுதியவர்களில் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வு எழுதிய 8 லட்சத்து 94 ஆயிரத்து 264 பேரில் மாணவிகள் 4 லட்சத்து 22 ஆயிரத்து 591 பேரும், மாணவர்கள் 3 லட்சத்து 96 ஆயிரத்து 152 பேரும் தேர்ச்சி அடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து இந்தப் பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான உடனடி மறுதேர்வு தொடர்பான அறிவிப்பு இன்று (11.05.2024) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக துணைத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் துணை தேர்வுக்கு வரும் 16ஆம் தேதி முதல் ஜுன் 1ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தவறும் மாணவர்கள் ஜுன் 4ஆம் தேதி முதல் ஜுன் 6ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. மேலும், அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பிற்கு மே 16ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜுலை 2ஆம் தேதி முதல் ஜுலை 8ஆம் தேதி வரை துணைத் தேர்வு நடக்கவிருக்கிறது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.