மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி கட்சி கொடி ஏற்றினார் கமலஹாசன்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மையம் கட்சி தொண்டர்கள் முன்னிலையில் பேசிய கமல்ஹாசன்,
இந்த உரை மிக சுருக்கமாக இருக்க வேண்டியது நம் கடமை, என் கடமை. நான் பள்ளிக்குப் போகாத பிள்ளையாக தெருக்களில் அழைந்திருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக கூடிய கூட்டம் இன்று தமிழகமெங்கும் இந்த குடும்பம் பரவியிருக்கிறது. இங்கே இதே இடத்தில் நின்று கொண்டு கட்சியின் கமிட்டி நபர்களின் பெயர்களை அறிவிக்கும் அளவிற்கு இன்று இன்னும் வளர்ந்திருக்கிறது.
இங்கே கொடியேற்றி இருக்கிறோம் பல இடங்களில் தமிழகத்தில் கொடியேறி கொண்டிருக்கிறது. இலக்கு உங்களுக்கு தெரியும். அதை நோக்கி நகர்வோம். குளத்தடி மீன் போல மேலே மழை பொழிகிறது நமக்கென்ன என்று இருந்த மக்கள் இன்று வெளியே வந்து இருக்கிறார்கள். காரணம் அரசியல் உதவாக்கரைகள் கூட்டம் குறைந்து மக்கள் வெள்ளம் பெருக்கெடுத்துவிட்டது.
தமிழகமெங்கும் தனியே நிற்கிறோம் என்று சொன்னது நான் அல்ல. நிற்போம் என்றால் நாம், நாம் என்பது எப்படி தனிமையாக இருக்க முடியும். நாம் என்றாலே ஒன்று படுவோம் என்று தானே அர்த்தம்.
மக்கள் பலம் இருக்கிறது. எந்த கணிப்பு எப்படி சொன்னாலும் கையை பிடித்து நாடி பார்த்து இங்கே புத்துயிர் இருக்கிறது என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் ஜோசியர்கள் அவர்களை நம்பி நான் எடுத்து வைத்திருக்கிறேன். நாம் செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கிறது. உங்கள் கட்சியின் அமைப்பு தயாரா என்னை இன்னமும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மக்களின் பலம் என்ன என்பதை நிரூபிக்க இன்னும் குறுகிய நாட்களே உள்ளது. இந்தக் கருவியை பயன்படுத்தி கொள்ளுங்கள் தமிழகம் வளம் பெறட்டும் நாளை நமதே எனக் கூறினார்.