Skip to main content

கானல் நீராகிவரும் எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பு -  தஞ்சை மக்கள் விரக்தி

Published on 17/06/2018 | Edited on 17/06/2018
seeni

 

செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதை மத்திய அரசும், தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சருக்கும் விரும்பம் இல்லை என்றே தோன்றுகின்றது, என்கிறார்கள் தஞ்சை மாவட்ட மக்கள்.

 

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என 2015 ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. அதற்காக செங்கல்பட்டு, மதுரை மாவட்டம் தோப்பூர், ஈரோடு மாவட்டம் பெருந்துறை,  புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி என ஐந்து இடங்களை தேர்வு செய்து 2016 ம் ஆண்டு பார்வையிட்டது. 

 

எய்ம்ஸ் மருத்துவமனை அமைய ஏதுவான சில வசதிகளும் இருக்கவேண்டும் என கோரியிருந்தது மத்திய அரசு.  அதில் மருத்துவமனை அமையும் இடம் 200 ஏக்கர் நிலம், அங்கேயே தரமான குடிநீர் வசதி, தேசிய நெடுஞ்சாலை, மாநில தலைநகரை இணைக்கும் ரயில் வழி,மற்றும் வான்வழி போக்குவரத்து  உள்ளிட்டவைகள் கொண்ட இடமாக இருக்கவேண்டும் என கூறி ஆய்வு செய்தனர். 

 

நில ஆய்வின் முடிவில் தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியே சரியான இடம் என அறிவித்துவிட்டு சென்றனர். அந்த இடத்தையே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் சட்டசபையில் அறிவித்திருந்தார். தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும், என கூறியுள்ளார்.

ஆனாலும் மத்திய அரசு ஆய்வை மேற்கொண்டு மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது, மாநில அரசோ மருத்துவமனை அமையும் இடத்தை காட்டிவிட்டோம் அனுமதி அளிப்பது மத்திய அரசின் வேலை என்கிறது, மத்திய அரசோ இன்னும் மூன்று மாத காலம் அவகாசம் வேண்டும் என நீதிமன்றத்தின் மூலம் கேட்டிருக்கிறது.  இரு அரசுகளின் கருத்தில் முரன் இருப்பதை பார்க்கும் போது எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்திற்கு கிடைக்குமா, குறிப்பா தஞ்சைக்கு கிடைக்குமா என்கிற கேள்வி எழுகிறது என்கிறார்கள் செங்கிப்பட்டியை சேர்ந்த சமுக ஆர்வலர்கள்.

 

இது குறித்து ஏற்கனவே பல போராட்டங்களை நடத்திவிட்டனர்.  அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு தயாராகிவரும் சிபிஎம் கட்சியினரிடம் கேட்டோம்,"  மத்திய அரசு தமிழகத்தை தொடரந்து மாற்றாந்தாய் பிள்ளையாகவே புறக்கனிக்கிறது. இடம் தேர்வு செய்து மூன்று ஆண்டுகளை கடந்துவிட்டது, ஆனாலும் எந்த இடத்தில் மருத்துவமனை அமைக்க இருக்கிறோம் என அறிவிக்கமறுக்கிறது, மத்திய அரசின் தமிழக ஆதரவாளர்களோ மாநில அரசு தான் அலட்சியம் செய்கிறது என குறைசொல்கிறார்கள். மாநில அரசோ இடம் காட்டவேண்டியது தான் எங்களின் வேலை அதை செய்துவிட்டோம், அனுமதி வழங்குவதும், நிதி ஒதுக்குவதும் மத்திய அரசின் வேலை என்கிறார்கள். அவர்களின் இந்த போக்கை பார்க்கும் போது எய்ம்ஸ் மருத்துவமனை கனவாகவே முடிந்துவிடும் போலிருக்கிறது,  தமிழகத்தை இதிலும் புறக்கனித்துவிடுவார்களோ என்கிற அய்யம் ஏற்படுகிறது, அடுத்தக்கட்டமாக  பெரும் போராட்டம் செய்ய முடிவு செய்துள்ளோம், எம்,ஜி,ஆர்  ஆட்சி காலத்தில் திருச்சியை இரண்டாவது தலைநகரமாக அறிவித்தபோது, செங்கிபட்டியில் தான் தலைமை செயலகம் அமையும் என்றார்.  அவ்வளவு வசதிகள் கொண்ட பகுதி, மத்திய அரசு உடனே எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்கவேண்டும்,"என்றார்.


 

சார்ந்த செய்திகள்