வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கவில்லையென்றால் ஷட்டரை உடைத்து தண்ணீரை எடுப்போம் என்று விவசாயிகள் பேசியதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் வீராணம் ஏரி மூலம் பாசனம் பெறும் விவசாயிகள் மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. விவசாயிகளும், விவசாய சங்க பிரதிநிதிகளும் தங்களுக்கு செப் 11-ஆம் தேதிக்கு முன்னதாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும். அதன்பிறகு தண்ணீர் திறந்தால் விரைகால் விட்டு நேரடி நெல் விதைப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாழகிடும். விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும், எனவே வீராணத்தில் முழு கொள்ளளவு தண்ணீர் உள்ள நிலையில் உடனே பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இல்லையென்றால் வரும் 8-ந்தேதி தேதி வீராணம் ஏரியின் ஷட்டரை உடைத்து நாங்களே பாசனத்திற்கு தண்ணீரை எடுத்துக்கொள்வோம் என கூட்டத்தில் பல விவசாயிகள் பேசியதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது . இதனால் விவசாயிகளுக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்தநிலையில் சிதம்பரம் கோட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சாம்ராஜ் அனைவரையும் சமாதனம் செய்துவைத்து பேசுகையில், விரைவில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை நடத்திய பிறகு வரும் 11-ந்தேதிக்கு முன்னதாகவே தண்ணீர் திறக்கப்படும் என்று கூறினார்.